×

சிஏஏ.விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசு பெரியகுளத்தில் விடியவிடிய சாலைமறியல் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தால் பரபரப்பு

உ.பாளையம்/பெரியகுளம், மார்ச் 13: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாத அதிமுக அரசை கண்டித்து, உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் இஸ்லாமிய அமைப்பினர் குடியேறும் போராட்டம் நடத்தினர். பெரியகுளத்தில் விடியவிடிய மறியல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர், எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தினர்.தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாத அ.தி.மு.க. அரசை கண்டித்து, உத்தமபாளையத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர், அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு கூட்டமைப்பினர் சார்பில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனைஅடுத்து தாலுகா அலுவலகம் முன்பு இந்த அமைப்பின் தலைவர் கலீல்ரகுமான், துணை தலைவர் கமர்தீன் தலைமையில் நேற்று நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டனர். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ்மந்திரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெர்க்மான்ஸ் முன்னிலை வகித்தனர். இதனால் டி.எஸ்.பி. சின்னகண்ணு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பாய், படுக்கை, தலையணை, வீட்டுசாமான்களுடன் ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து தாசில்தார் உதயராணியிடம் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியகுளத்தில் முஸ்லிம்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று முன்தினம் இரவு பெரியகுளம், பங்களாபட்டி பிரிவு அருகே பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்ட எஸ்பி சாய்சரண்தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் தொடர்ந்து விடிய விடிய பஸ் மறியல் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் கலெக்டர் பல்லவிபல்தேவ் மற்றும் எஸ்பி சாய்சரண்தேஜஸ்வி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்ததை தொடர்ந்து பஸ் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விடிய விடிய நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து தடைபட்டது.

Tags : government ,Tamil Nadu ,CAA ,
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...