×

காற்றில் பறக்கும் போக்குவரத்து விதிகள் விபத்துகள் அதிகரிக்கும் அவலம்

காரைக்குடி, மார்ச் 13: காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை புறம் தள்ளுவதால் தினமும் விபத்து நடப்பது வாடிக்கையாகி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பகுதி வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாக உள்ளது. நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப போதிய மாற்றங்கள் எதும் செய்யப்பட வில்லை. பத்திரப்பதிவு, வாகன பதிவு உள்பட அனைத்து விதங்களிலும் மாவட்டத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டி தரும் தாலுகாவாக இருந்தும் வளர்ச்சி என்பது போதுமானதாக ஏற்படவில்லை. கடந்த சில ஆண்டுகளில் நகர்பகுதியில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியால், பரபரப்பான நகரங்களுக்கு இணையாக உள்ளது. நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம், கனரக வாகனம் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. திருமண நாட்கள் என்றால் நகருக்குள் செல்லக் கூட முடியாத அளவில் நெருக்கடி ஏற்படுகிறது. இதில் சாலை ஓரங்களில் வைக்கப்படும் பிளக்ஸ் போர்ட், தரைக்கடைகள், திருமண ஊர்வலங்கள் என மக்கள் சென்று வருவதே ஒரு போராட்டமாக மாறி விட்டது. போலீசார் அவ்வப்போது மாற்றங்கள் கொண்டு வந்தாலும் நெரிசல் குறைவது இல்லை. மாதத்திற்கு குறைந்தது சிறிய அளவில் 30 விபத்துகளாவது நடந்து விடுகின்றன. குடிபோதையில் வாகனங்களை ஓட்டுதல், மொபைல் போன்களில் பேசியபடி ஓட்டுதல், செல்பி எடுத்துக்கொண்டே வாகனம் ஓட்டுதல், மூன்று நபர்கள் அதற்கு மேல் ஏற்றிக்கொண்டு டூவீலர்களில் செல்வது போன்றவை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இளைஞர்கள் ஓட்டிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. மிக அதிகமான வேகத்தில் கட்டுப்பாடின்றி வாகனங்களை ஓட்டுவதால், இந்த விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து விதிமுறையை பின்பற்றாமல் தாறுமாறாக வாகனங்களை இயக்குபவர்களால், அவர்கள் மட்டுமின்றி ரோட்டில் செல்லும் மற்றவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நகரில் ஏற்படும் பல வாகன விபத்துகள், எதிர்பாராமல் நடந்த விபத்தாக இல்லாமல், பல நேரங்களில் போக்குவரத்து விதிகளை பின்பற்றாதவர்கள் செய்த மாபெரும் தவறுகளாகவே உள்ளன. அசுர வேகமும், கட்டுப்பாடில்லாத இயக்கம் வாகனங்களின் மோதல்களுக்கு அதிக வாய்ப்பாகின்றன. ரோட்டோர ஆக்கிரமிப்புகள், ரோட்டில் உள்ள குழிகள், ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் என நகர ரோடுகள் சிக்கி கிடக்கின்றன. இதில் தினசரி சென்று வரவேண்டிய கட்டாயத்தில் தான் மக்கள் உள்ளனர். போலீசாரும் விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, உரிய அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூகநால ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accidents ,
× RELATED கொல்கத்தாவில் 2 மாத ஊரடங்குக்கு பின்...