×

சிவகங்கை மாவட்டத்தில் சுத்திகரிப்பு குடிநீர் கிடைக்காமல் உடல் பாதிப்புக்கு ஆளாகும் மக்கள்

சிவகங்கை, மார்ச் 13: சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஆழ்குழாய் மூலம் வரும் நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக குடிப்பதால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய கண்மாய்கள் 4 ஆயிரத்து 871, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 968 கண்மாய்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் குளத்து நீர் மற்றும் ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீரே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, கால்வாய் தூர் வாராதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீர் நிலைகளுக்கு மழை நீர் முழுமையாக வரவில்லை.இதனால் குடிநீர் குளங்களில் நீர் வரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து ஊராட்சிகளில் உள்ள கிராமங்களிலும் ஆழ்குழாய் (போர்வெல்) சிறு மின் விசை பம்பு அமைக்கப்படுகிறது. ஒரே தெருவில் இரண்டு, மூன்று ஆழ்குழாய் கூட அமைக்கின்றனர். ஆனால் நேரடியாக இந்த நீரை குடிநீராக பயன்படுத்த முடியாது. இதற்கு குளத்து நீரே பரவாயில்லை என்ற நிலையில் கிடைக்கும் வரையில் குளத்து நீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது குளத்தில் நீர் இல்லாத நிலையில் ஆழ்குழாய் நீரை குடிநீராக பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. ஆனால் இந்த நீர் உப்பு அல்லது உவர்ப்பாக இருக்கும். இந்த நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக குடிநீராக பயன்படுத்தினால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.ஆழ்குழாய் மூலம் வரும் உப்புத்தன்மை கொண்ட நீரினை சுத்திகரிப்பு செய்து குடிநீராக பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.விவசாய சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘குளங்கள் வற்றி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் ஆழ்குழாய் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட ஆழ்குழாய் இல்லாத கிராமங்களே இல்லை எனும் அளவிற்கு அனைத்து இடங்களிலும் அமைத்துள்ளனர். ஆனால் இவைகள் முழுமையாக குடிநீருக்கு பயன்படுத்த முடியாமல் உள்ளன. பல இடங்களில் வேறு வழி இல்லாமல் குடிநீராகவும் பயன்படுத்தப்படுகிறது.
இது ஆபத்தானதாகும். மாவட்டத்தில் உள்ள 90 சதவீத கிராமத்தினருக்கு சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை. ஆழ்குழாயுடன் நிலையான சுத்திகரிப்பு உபகரணங்களும் அமைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மீண்டும், மீண்டும் ஆழ்குழாய் மட்டும் அமைக்கின்றனர். இனி புதிய ஆழ்குழாய் அமைக்காமல் ஏற்கனவே உள்ளவைகளில் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

நீர் மேலாண்மை அலுவலர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் மேற்பரப்பு நீர், பொதுப்பணித் துறையின் நீராதாரப்பிரிவால் மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. மேற்பரப்பு நீருடன் நிலத்தடி நீரும் குடிநீர் வினியோகத்திற்கான முக்கிய ஆதாரமாக விளங்குகின்றது. நீராதாரங்கள் வறண்டு விடுவதாலும், நீர் தேவை வேகமாக உயர்வதாலும் நீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இவற்றினை போக்க நீர் நிலைகளை புணரமைத்தல், நீர் சிக்கனத்திற்கு ஏற்றவகையில் குழாய்கள் உள்ளிட்ட உபகரணங்களை பராமரிக்க வேண்டும். ஆழ்குழாயுடன் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்க ஊராட்சி நிர்வாககங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆழ் குழாய் நீரை சுத்திகரிக்காமல் குடிநீராக அருந்துவது ஆபத்தானது தான்’ என்றார்.

Tags : district ,Sivagangai ,
× RELATED மாநில அளவிலான போட்டிக்கு கூடைப்பந்து வீரர்கள் இன்று தேர்வு