×

மேலமுந்தல் பகுதியில் கடற்கரையில் குவிந்துள்ள கழிவுகளால் சுகாதாரக்கேடு துர்நாற்றத்தால் கிராமத்தினர் அவதி

சாயல்குடி, மார்ச் 13:  மேலமுந்தல் கடற்கரையோரங்களில் கடல் கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு நிலவி வருவதால் அகற்ற வேண்டும் என கிராமமக்கள், மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி ஒன்றியம், மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள கடலில் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. கடற்கரைக்கு மீனவர்கள், பெண்கள், மீன் வியாபாரிகள், விற்பனையாளர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கடலில் மீன்பிடித்து வரும் போது மீன்வலையில் கடல்புற்கள், தேவையற்ற சங்குகள், நண்டு ஓடுகள் போன்ற கடல் உயிரினங்கள் சிக்கிக் கொண்டு வருவதுண்டு. கரையில் வலையிலிருந்து மீனை பிரித்தெடுக்கும் மீனவர்கள், வலையில் சிக்கி வந்துள்ள தேவையற்ற கழிவுகளை கடற்கரையில் அப்படியே போட்டு விட்டு செல்வது வழக்கம். அந்த கழிவுகள் கடற்கரையில் தேங்கி குப்பையாகி குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. மீன் ஏலம் தளம், வலை உலர்தளம், வலை பாதுகாப்பு கூடம் போன்ற பகுதிகளிலும் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும் மீனவர்கள் இல்லாத நேரத்தில் வரும் குடிமகன்கள் மதுவை குடித்து விட்டு பாட்டில்களையும் உடைத்து விட்டு செல்கின்றனர். உடைந்த பாட்டில் துகள்களை கடலுக்குள் வீசி செல்வதால் கடலுக்குள் இறங்கும் மீனவர்கள், குளிக்க வரும் பொதுமக்களுக்கு பாட்டில் துகள்களால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களையும் கடலுக்குள் வீசி விட்டு செல்வதால் மீன், அரியவகை பவளபாறை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பும் ஏற்படும் அபாயம் இருப்பதாக கிராமத்தினர் கூறுகின்றனர். எனவே கடல்கரையில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வலை உலர்தளம், ஏலம் கூடம் போன்ற இடங்களில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும். தினந்தோறும் சுகாதார பணியாளர்களை கொண்டு துப்புறவு செய்ய வேண்டும். கிரிமி நாசினி தெளிக்க வேண்டும். கடற்கரையில் பிளாஸ்டிக் உபயோகிக்க கூடாது. மது அருந்தக் கூடாது என எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளையும் வைக்க மாவட்ட உதவி இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : beach ,
× RELATED தூத்துக்குடி கடற்கரையில் இருந்து...