×

நெரிசல் மிகுந்த சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு வேடிக்கை பார்க்கும் போலீசார்

பரமக்குடி, மார்ச் 13:  வாகன போக்குவரத்து மிகுந்த ரோடுகளில், பயணிகளை நடுரோட்டில் இறக்கி, ஏற்றும் பஸ் டிரைவர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பரமக்குடி ஊரை சுற்றிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இதனால் தினமும் வியாபாரம், கூலி தொழில், விவசாயம் உள்ளிட்ட காரணங்களுக்காக 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இதற்கு ஏற்றார்போல், வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு பெருகி விட்டது. இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. பரமக்குடி நகர் மக்களுக்கு பிரதான பிரச்னைகளில் ஒன்றாக, வாகன நெரிசல் உருவெடுத்துள்ளது. பரமக்குடிக்கு மானாமதுரை, முதுகுளத்தூர், இளையான்குடி, கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து உள்ளூர் பேருந்துகளும், பரமக்குடி சுற்றியுள்ள புறநகர் மற்றும் முக்கிய கிராமங்களை இணைப்பதற்காக மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பரமக்குடி பகுதிகளில் உள்ள பெரும்பாலான பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடையோ, அறிவிப்பு பலகை இல்லாமல் உள்ளது.

இதனால் சில மினி பேருந்துகள் அனைத்தும் கை நீட்டும் இடத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்வது வாடிக்கையாக உள்ளது. ஒரு சில அரசு உள்ளூர் பேருந்துகளும் இதை வழக்கமாக கொண்டுள்ளது. சில டிரைவர்கள் சாலையோரத்தில் பேருந்துகளை நிறுத்தாமல், நடுரோட்டில் நிறுத்தி, பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் திடீரென தடுமாறுகின்றன. மேலும் கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் நிற்பதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்கவும், பேருந்து நிறுத்தும் இடத்தை வரையறை செய்யவேண்டும். மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், பேருந்துகளை ஓரமாக நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்குகின்றனரா என்பதை போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED இரவு பகலாக ஓய்வின்றி கொரோனா...