×

சாலையோர மரங்களில் விளம்பரப் பலகை

திருவாடானை, மார்ச் 13: சாலையோர மரங்களில் விளம்பரப் பலகை வைப்பதற்காக ஆணி அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானையில் இருந்து தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலை திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஓரியூர் திருவெற்றியூர் உட்பட பல ஊர்களுக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை ஓரங்களில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் கடைகள் விளம்பரம் முதல் கல்லூரி விளம்பரங்கள், கம்பெனி விளம்பரங்கள் என பலதரப்பட்ட விளம்பரங்கள் செய்ய மரங்களில் ஆணி அடித்து விளம்பர போர்டுகளை வைக்கின்றனர். இதனால் சாலையோர மரங்கள் ஒரு சில ஆண்டுகளில் பட்டுப்போய் விடுகிறது.  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மரம் இருந்தால்தான் மழை வளம் கிடைக்கும் என அரசு கூறுகிறது. ஒரு பக்கம் மரங்களை நடுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல கோடி ரூபாயை செலவிடுகிறது. மறுபக்கம் சமூக விரோதிகளால் மரங்கள் வெட்டி கடத்தப்படுகிறது. அதோடு தனியார் விளம்பர கம்பெனிகள் சாலையோர மரங்களில் ஆணி அடித்து தங்களது விளம்பர போர்டுகளை வைத்து விடுகிறது.

ஒரு மரத்தில் பத்துக்கும் மேற்பட்ட விளம்பர போர்டுகள் மாட்டியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட கம்பெனி வைத்த போர்டை கழற்றி எடுத்து விட்டு மற்றொரு கம்பெனி விளம்பர போர்டு மாட்டி வைக்கின்றனர். ஒரு மரத்தில் வருடத்திற்கு 20க்கும் மேற்பட்ட தடவை அணிகளை மாற்றி மாற்றி அடிக்கின்றனர். இதனால் சில வருடத்தில் மரங்கள் பட்டுப் போய் விடுகிறது. எனவே சாலையோர மரங்களில் விளம்பர போர்டுகளை வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை