×

சோழவந்தான் 5வது வார்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதிப்படும் பொதுமக்கள்

சோழவந்தான், மார்ச் 13: சோழவந்தான் 5வது வார்டில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி ஏற்படும் மின்தடையால், திருட்டுச் சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக, பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில், 5வது வார்டு ரயில்வே கேட்டின் வடபகுதியில் உள்ளது. இந்த வார்டில் உள்ள வாடிப்பட்டி சாலையில் பசும்பொன் நகர், வஉசி நகர், பாலமுருகன் நகர், எம்விஎம் பள்ளித்தெரு, நாகுநகர், மோகன் பிளாட், அண்ணாமலை நகர், ஆசிரியர் காலனி உள்ளிட்டவைகளிலும், நகரி சாலையில் ஆலங்கொட்டாரம், மீனாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நகரில் உள்ள 18 வார்டுகளுக்கும் மின்இணைப்புகள் சோழவந்தான் நகர் மின்நிலையம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதில், 17 வார்டுகளுக்கு மட்டும் நகர் மின்நிலையம் மூலமும், 5வது வார்டுக்கு வாடிப்பட்டி மின்நிலையம் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. நகர் பகுதியில் மின்தடை அதிகமில்லாததுடன், மின்குறைகள் உடனடியாக சரி செய்யப்படுகிறது. ஆனால் 5வது வார்டில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. நிர்வாகம் சோழவந்தான் மின்நிலையமும், விநியோகம் வாடிப்பட்டி மின்நிலையமாகவும் இருப்பதால் குறைகளை உடனடியாக சரிசெய்வதில்லை. மின்தடை குறித்து சோழவந்தான் நிலையத்திற்கு புகார் தெரிவித்தால், ``எங்கள் தவறு இல்லை. வாடிப்பட்டியில் தான் பிரச்னை என்கின்றர். வாடிப்பட்டியில் கேட்டால் நாங்கள் சரியானபடி மின்விநியோகம் செய்கிறோம். சோழவந்தானில்தான் சரி செய்ய வேண்டும்’ என்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் பலமுறை உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் பலனில்லை.

இதுகுறித்து 5வது வார்டு பொதுமக்கள் கூறுகையில், `மின் நிர்வாகம் சோழவந்தானிலும், விநியோகம் வாடிப்பட்டியிலும் இருப்பதால் புகார் கூறினால் மாறி, மாறி பதில் கூறி தட்டிக்கழிக்கின்றனர். நகர் பகுதிக்குரிய மின் இணைப்புக் கட்டணம் செலுத்தும் எங்கள் வார்டு பொதுமக்களுக்கு மின்விநியோகம் மட்டும் கிராமப் பகுதிக்கு உரியதாக உள்ளது. பகலில் மட்டுமல்லாது, இரவிலும் பலமுறை மின்தடை ஏற்படுகிறது. இப்பகுதியில் பல கொள்ளைச் சம்பவங்களும், வழிப்பறிகளும் அடிக்கடி நடைபெறுகிறது. ரயில்வே கேட்டைத் தாண்டி மின் விநியோகம் செய்யமுடியாது என்பதால் வாடிப்பட்டியிலிருந்து கொடுப்பதாக மின் வாரியத்தினர் சமாளிக்கின்றனர். தற்போது ஆசிரியர் காலனி, மீனாட்சி நகருக்கு மட்டும் தொலைபேசி நிலையப்பகுதி மூலம் சோழவந்தான் மின்நிலைய பகுதி இணைப்பு கொடுத்துள்ளனர். மற்ற பகுதிகளுக்கு இங்கிருந்து மின்இணைப்பு கொடுக்க சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்காக சாலை ஓரத்தில் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு கூட அருகில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பலமுறை முயற்சித்த மின்வாரியத்தினர் பின்பு கைவிட்டு விட்டனர். குடியிருப்போர் சங்கத்தினரிடம் முறையிட்டும் பலனில்லை. ரயில்வே மேம்பால பணிகள் முடிந்தால், நகர் பகுதியிலிருந்து மின் விநியோகம் கிடைக்கும். அதுவும் இழுபறியாக உள்ளது. இதுபோல் பல்வேறு பிரச்னைகளால் இப்பகுதி அடிக்கடி இருளில் மூழ்குகிறது. குற்றச்சம்பவங்களுக்கு வழிவகுக்கும் இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பொதுமக்கள் பயன்பாட்டுக்குரிய மின் விநியோகத்திற்கான மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு இடையூறாக உள்ள தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து இதை சரிசெய்யுமாறு மதுரை மாவட்ட கலெக்டரை கேட்டுக் கொள்கிறோம்’’ என்றனர்.

Tags : Cholavandan 5th Ward ,
× RELATED டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலி