×

அரசு பஸ்ல பயணம் செய்யுங்க... போக்குவரத்து கழகத்தினர் இனிப்பு வழங்கி பிரசாரம்

மதுரை, மார்ச் 13: அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டம் சார்பில் நகர் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் இதர நகரங்களுக்கும் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதேபோல், மதுரை மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சுற்றுலா பஸ்சும் இயக்கப்படுகிறது. ஒரு நபருக்கு ரூ.125 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சுற்றுலா பஸ் எல்லீஸ்நகரில் இருந்து புறப்பட்டு, திருமலைநாயக்கர் மகால், தெப்பக்குளம், அழகர்கோயில், தமிழ்ச்சங்கம் மற்றும் காந்தி மியூசியம் சென்று எல்லீஸ் நகரை வந்தடையும். சுமார் 6 மணி நேர பயணமாக கணக்கிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் தங்களின் பாதுகாப்பான பயணத்தை அரசு பஸ் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு பொதுமேலாளர் ராஜேஷ்வரன் தலைமை வகித்தார். துணை பொது மேலாளர்கள் அறிவானந்தம், ரவிக்குமார், உதவி பொறியாளர் (இயக்கம்) அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று இனிப்புகள் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நகரின் பல பகுதிகளிலும் இந்த பிரசாரம் நடக்கவுள்ளது.

Tags : Transport Corporation ,
× RELATED கேரளாவில் போக்குவரத்து கழகத்திற்கு கடும் நஷ்டம்