×

கோடை காலத்தில் கோழிகளை விரட்டலாமா? முன்னாள் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி விளக்கம்

நத்தம், மார்ச் 13: கோடை காலத்தில் கோழிகளை விரட்டி பிடிக்கக் கூடாது. விரட்டி பிடிப்பதால் அவைகள் பலவீனம் அடைந்து இறக்க நேரிடலாம் என முன்னாள் கால்நடை பராமரிப்பு துறை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இது பற்றி மேலும் அவர் கூறியதாவது:கோழிகளின் உடலில் மற்ற பிராணிகளின் வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும். இதனால் கூடுதல் வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது. கோழிகளுக்கு இயற்கையிலேயே வியர்வைச் சுரப்பி இல்லாத காரணத்தால்தான் இந்த தடையாகும்.வெயில் காலத்தில் கறிக்கோழிகள் தீவனம் சாப்பிடாவிட்டால் அவற்றின் எடை அதிகரிக்காது. கறிக்கோழி வளர்ப்பை பொறுத்தவரை கோடை காலத்தில் வெப்ப அதிர்ச்சி நோய் தாக்கும். சுற்றுப்புறங்களில் ஏற்படும் கூடுதலான வெப்பமே இந்த நோயை உண்டாக்குகிறது. நோய் தாக்கிய கோழிகளுக்கு மூச்சிரைப்பு, சோர்வு ஏற்படும். இவை நிறைய தண்ணீர் குடிக்கும். தீனி அதிகம் சாப்பிடாது. பண்ணையின் பக்கவாட்டுச் சுவர் ஓரமாக ஒதுங்கி நிற்கும். பிற்பகலில் இந்த கோழிகள் இறந்துவிடும்.

இதனை தவிர்க்க பண்ணையில் தண்ணீர் வைக்கும் பாத்திரங்கள் அதிகமாக வைக்க வேண்டும். தண்ணீரில் ஐஸ் கட்டி சேர்த்து கொடுக்கலாம். கூரையின் மேல் வைக்கோல் பரப்பி தண்ணீர் தெளித்து விட வேண்டும். உலர் தீவனங்களை கொடுக்காமல், தண்ணீர் விட்டு பிசைந்து வைக்க வேண்டும். விடியும் முன்பு விளக்குகள் எரிய விட்டால் அந்நேரத்தில் கோழிகள் தீவனம் சாப்பிட ஏதுவாக இருக்கும். நேரம் ஆக ஆக வெப்பம் கூடுவதால் தீவனம் சாப்பிடுவது குறையும். நூறு கோழிகளுக்கு 500 மில்லி கிராம் வீதம் வைட்டமின் சி சத்தினை தரலாம். அல்லது பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழம் பிழிந்து கொடுக்கலாம். இவ்வாறு கூறினார்.

Tags : Livestock Department ,
× RELATED ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும்...