×

அறந்தாங்கி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

அறந்தாங்கி, மார்ச் 13: அறந்தாங்கி அருகே மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர். அறந்தாங்கியை அடுத்த கோவில்வயல் பகுதியில் பொதுப்பணித்துறையின் நிர்வாகத்தில் இயங்கி வரும் மணல் சேமிப்பு கிடங்கில் இருந்து ஆன்லைன் பதிவின் அடிப்படையில் மணல் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் பெரும்பாலும் வெளியூர் லாரிகளே பதிவு செய்து மணல் ஏற்றி செல்கின்றன. இந்நிலையில் ஆன்லைன் பதிவின் மூலம் கோவில்வயல் மணல் சேமிப்புகிடங்களில் மணல் ஏற்றும் வெளியூர் லாரி ஓட்டுனர்கள் சிலர், தாங்கள் ஏற்றும் மணலை சில புரோக்கர்கள் மூலம் அறந்தாங்கி மற்றும் அறந்தாங்கியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஒரு லோடு மணல் ரூ.20 முதல் 40 ஆயிரம் வரை சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

தகவலின்பேரில் அறந்தாங்கியை அடுத்த நாகுடி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் நவீன்குமார் மற்றும் போலீசார் நாகுடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில், லாரி ஓட்டுனர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார். சந்தேகமடைந்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த லாரி ஆன்லைனில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரால் மணல் கேட்டு ஆன்லைனில் புக்கிங் செய்ததும், அதன்படி நேற்று அந்த லாரியில் கோவில்வயல் மணல் சேமிப்பு கிடங்கில் மணல் ஏற்றியதும் தெரியவந்தது.

ஆன்லைன் பதிவின் மூலம் மணல் ஏற்றிக் கொண்டு சிங்கம்புணரிக்கு செல்லாமல் சட்ட விரோதமாக நாகுடியில் மணலை அதிக விலைக்கு இறக்க வந்ததும் தெரியவந்தது. அதையடுத்து போலீசார் சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் நாகமங்கலத்தைச் சேர்ந்த சிவனேசன் என்பவரை கைது செய்தனர்.

Tags : Aranthangi ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு