×

கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்க இளம் வயது பள்ளி குழந்தைகளுக்கு மார்ச் 31வரை விடுமுறை விட வேண்டும்

அறந்தாங்கி, மார்ச் 13: கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்தும், அச்சத்திலிருந்தும் பள்ளி குழந்தைகளை மீட்க இளம்வயது குழந்தைகளுக்கு மார்ச் 31ம்தேதி வரை விடுமுறை விட வேண்டும் என்று கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது. கல்வியாளர்கள் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது: உலகெங்கும் தற்பொழுது பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி, அனைத்து மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றது. நமது மாநிலத்தைப் பொறுத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வெகு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும்கூட, பொதுமக்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் இது குறித்த விழிப்புணர்வு இன்னும் அதிகப்படுத்த வேண்டியுள்ளது.

ஊடகங்கள் வழியாகவும், பத்திரிகைகள் வழியாகவும் பல்வகையான விழிப்புணர்வு செய்திகள் பரவிவரும் வேளையில், தற்பொழுது பள்ளிக்கல்வித் துறை மூலமாக ஒரு விழிப்புணர்வு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது வரவேற்பிற்குரியது. அதில் அடிக்கடி தும்மல், இருமல் வருகின்ற மாணவர்களை மற்ற மாணவர்களோடு இணைந்திருப்பதை தவிர்க்கவும், உடல்நலமில்லாமல் இருக்கும் மாணவர்களை பள்ளிக்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சரியான நடவடிக்கை என்றாலும் கூட, மாணவர்களிடையே இது மிகுந்த மன உளைச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி விடும். ஏனெனில் பெரும்பகுதி மாணவர்களுக்கு இருமல், தும்மல் என்பது இயல்பாகவே இருக்கின்றது. இவ்வாறான சூழலில் எது சாதாரணமானது, எது பாதிப்பிற்குரியது என்பதைக் கண்டறிவது கடினமாகவும் இருக்கும்.

மேலும் அவ்வாறு தனிமைப்படுத்தப்படும் மாணவர்களை பிற மாணவர்கள் புறக்கணிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். இது மனரீதியாக வெகுவாக குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நமது அண்டை மாநிலமான கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளம் வயது குழந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. குழந்தைகளது உயிர்களுக்கு முன்னால் எதுவும் முக்கியமல்ல. வருமுன் காப்பதே சிறந்தது என்பதற்கிணங்க நமது மாநிலத்திலும் மார்ச் 31 வரை விடுமுறை வழங்கி குழப்பத்தையும் பதட்டத்தையும் போக்கிட வகை செய்யும்படி கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags : school children ,
× RELATED கொரோனா பாதிப்பு 731 ஆக அதிகரிப்பு