×

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 13: தற்காலிக துணை தாசில்தார்கள் நியமன பட்டியலை ரத்து செய்ததை கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று கருப்புபட்டை அணிந்து பணியாற்றினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 36 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை தாசில்தார்களாக கலெக்டர் உமா மகேஸ்வரி 4 மாதங்களுக்கு முன்பு நியமனம் செய்தார். இந்த நியமனத்துக்கு தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வந்தது. இந்த போராட்டத்தைத் தொடர்ந்து மாநில வருவாய் நிர்வாக ஆணையரகத்தின் அறிவுரைப்படி ஏற்கனவே வெளியிடப்பட்ட தற்காலிக துணை தாசில்தார் நியமன பட்டியலை ரத்து செய்துவிட்டு 36 பேர் கொண்ட புதிய பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தற்காலிக துணை தாசில்தார் நியமன பட்டியலை ரத்து செய்ததை கண்டித்தும், புதியதாக அறிவிக்கப்பட்ட தற்காலிக துணை தாசில்தார் நியமன பட்டியலை ரத்து செய்யக்கோரி கடந்த 7ம் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடந்த 10ம் தேதி மற்றும் நேற்று முன்தினம் ஆகிய 2 நாட்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.

Tags : Pudukkottai District Revenue Officers Association ,
× RELATED திருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை...