×

கீரனூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை, மார்ச் 13: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் திருச்சி- புதுக்கோட்டைக்கு மையமாக அமைந்துள்ளது. கீரனூரை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் 95 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்த சுற்றுவட்டார பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், தனியார் மேல்நிலை பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் இருந்து ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். இவ்வாறு தேர்ச்சி பெறும் மாணவர்கள் பொறியியல் படிக்க வேண்டும் எனில் புதுக்கோட்டை அல்லது திருச்சி ஆகிய இரண்டு நகரங்களை நோக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் அவர்களின் குடும்பத்திற்கு அதிக செலவு ஏற்படுகிறது. குறிப்பாக திருச்சிக்கு சென்று வர ஒரு நாளைக்கு பேருந்துக்கு ரூ.35 செலவாகின்றது. மேலும் இதர செலவுகளுடன் ரூ.50 என்று வைத்துகொண்டாலும் மாதத்திற்கு ரூ. ஆயிரத்து 500 கண்டிப்பாக செலவு ஏற்படும். வருடத்திற்கு ரூ.18 ஆயிரம் செலவு ஏற்படுகிறது. கல்லூரி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் தனி. இந்த பகுதியில் உள்ளவர்கள் விவசாயிகள் என்பதால் இந்த படிப்பு செலவை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். இதனால் கடன் வாங்கும் நிலைக்கு செல்கின்றனர். இதனால் கீரனூர் பகுதியில் புதிதாக ஒரு அரசு பொறியியல் கல்லூரியை தொடங்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது: கீரனூர் தற்போது பெரிய நகரமாக மாறி வருகின்றது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாணவர்கள் திருச்சி, புதுக்கோட்டை நகரங்களுக்கு செல்ல கீரனூர் வந்து செல்கின்றனர். இதனால் கல்லூரி செல்லும் மாணவர்களின் குடும்பங்களில் அதிக செலவு ஏற்படுகிறது. சிலர் சிரமத்துடன் மாணவர்களை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர். செலவுகளை செய்ய முடியாத ஏழைகள் தங்களின் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புவது இல்லை. இந்த நிலையில் உள்ள மாணவர்கள் கீரனூர் பகுதியில் அதிகமாக உள்ளனர். இவர்களுக்கு கீரனூரில் புதிய கல்லூரி ஆரம்பித்தால் இலவசமாக உயர் கல்வி பெற்று இவர்களும் சமுதாயத்தில் கல்வி கற்றவர்களாக வலம் வருவார்கள்.

கீரனூர் பகுதியில் புதிய பொறியியல் கல்லூரி அமைக்க போதுமான இடங்கள் உள்ளது. பஸ், ரயில் போக்குவரத்து வசதிகள் உள்ளது. மேலும் தண்ணீர் வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கின்றது. இதேபோல் கல்லூரி ஆரம்பித்தால் ஒரு கல்லூரிக்கு குறைந்தது எவ்வளவு மாணவர்கள் வேண்டுமோ அதைவிட அதிகமான மாணவர்கள் சேர்க்கை இருக்கும். இதனால் மாணவர்களின் நலன் கருதி கீரனூர் பகுதியில் தமிழக அரசு சார்பில் புதிய பொறியியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Government Engineering College ,
× RELATED தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்