×

மர்மமான முறையில் இறந்து கிடந்த 4 வயது ஆண் மான்

பெரம்பலூர், மார்ச் 13: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசலூர், இரட்டைமலை சந்து, நாவலூர், மேலப்புலியூர், களரம்பட்டி, சத்திரமனை, பாடாலூர், சித்தளி, பேரளி, பண்டகப்பாடி, பெரிய வடகரை, வெண்பாவூர், மாவிலிங்கை, ரஞ்சன்குடி, மேட்டுப்பாளையம், கை.களத்தூர், காரியானூர், அய்யனார்பாளையம், செங்குணம், குரும்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள காப்புக்காடுகளிலும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கருவேல மரங்கள் அடர்ந்த ஏரிகளிலும் 500க்கும் மேற்பட்ட அரியவகை புள்ளிமான்கள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் காணப்படும் கடுமையான வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் மான்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள வயல் பகுதிகளுக்கும் கிராம பகுதிகளுக்கும் நுழைவதால் கிணறுகளில் தவறி விழுந்து இறப்பதும், சாலையை கடக்கும்போது விபத்தில் படுகாயமடைந்து இறப்பதும், தெருக்களில் போகும்போது நாய்கள் விரட்டி கடிபட்டு இறப்பதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று காலை செங்குணம் பிரிவுரோடு பகுதியில் 4 வயதுடைய ஆண் மான் ஒன்று வயிறு உப்பலாக வாய் பகுதியில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன், வனச்சரகர் சசிகுமார் ஆகியோர் உத்தரவின்பேரில் வனவர்கள் பாண்டியன், சுகந்தி, வன காப்பாளர் ராஜி, வனக்காவலர் மணிமேகலை ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த மானின் உடலை மீட்டு கால்நடைத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு கால்நடை மருத்துவர் கவிநிலவன் நடத்திய பிரேத பரிசோதனைக்கு பிறகு சித்தளி காப்புக்காடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட மான் அங்கு புதைக்கப்பட்டது. உடலில் வேறு எங்கும் பலத்த காயங்களின்றி மர்மமான முறையில் இறந்து கிடந்த மான் புதிதாக நோய் எதுவும் தாக்கி இருந்ததா அல்லது சாப்பிட்ட உணவில் ஏதேனும் செரிமானம் ஆகாத காரணத்தால் வயிறு உப்பி இருந்ததா, அதனால் தான் வாயில் புண் வந்ததால் காயங்கள்போல் காணப்பட்டதா என்பது தெரியவில்லை.

Tags :
× RELATED தூத்துக்குடி அருகே சுவரில் மோதி மான் பலி