×

பொன்பரப்பி கிராமத்தில் தோட்டக்கலை துறையின் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

அரியலூர், மார்ச் 13: அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம் போன்ற திட்டங்கள் மானிய விலையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தோட்டக்கலை பயிர்களில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெருவிவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் காய்கறி பரப்பு அதிகரித்தல் இனத்தில் எக்டருக்கு ரூ.20,000 மானியத்தில் காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பியில் தோட்டக்கலைதுறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.

அதன்படி பொன்பரப்பி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சொட்டுநீர் பாசனம் மற்றும் 2 ஏக்கர் பரப்பளவில் பயிடப்பட்டுள்ள கொய்யா தோட்டம், 5 ஏக்கர் பரப்பளவில் வாழைத்தோட்டம், பலா தோட்டங்கள், ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள புடலங்காய் மற்றும் பீர்க்கங்காய் பந்தல் தோட்டத்தை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து உஞ்சினி கிராமத்தில் மல்லியம்பாள் என்பவரின் விதைப்பண்ணையில் 2.50 ஏக்கர் பரப்பளவில் பயிடப்பட்டுள்ள நிலக்கடலை தோட்டத்தை பார்வையிட்டார். ஆய்வின்போது அரியலூர் துணை இயக்குனர்கள் அன்புராஜன், பழனிசாமி, உதவி செயற்பொறியாளர் இளவரசன், உதவி இயக்குனர்கள் பெரியசாமி, ஜென்ஸி மற்றும் உதவி தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Review of Development Projects of Horticulture Department ,Ponparappi Village ,
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது