×

என்.ஆர்.எச்.எம் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி அரசு ஊழியர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

காரைக்கால், மார்ச் 13: புதுச்சேரி என்.ஆர்.எச்.எம் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, என்.ஆர்.எச்.எம் ஊழியர்களுக்கு ஆதரவாக, காரைக்கால் அரசு ஊழியர் சம்மேளனம் வாயிற் கூட்டம் நடத்தியது. புதுச்சேரி அரசு நலவழித்துறையின் கீழ் இயங்கும் தேசிய சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் சுமார் 600க்கும் மேற்பட்ட என்.ஆர்.எச்.எம் (தேசிய கிராமப்புற சுகாதார ஊழியர்கள்) ஊழியர்கள், புதுச்சேரி பிராந்தியங்களான காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய 4 பகுதிகளிலும் 14 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றனர்.

காரைக்காலில் 113 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையிலும் ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே பணிநிரந்தரம், பதவி உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தை, சம்மேளனத்தின் இணைப்பு சங்கமான என்.ஆர்.எச்.எம் ஊழியர் சங்கம் நடத்தி வருகிறது. 10 நாட்கள் கடந்தும் அவ்வூழியர்கள் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வராததால், அரசின் அலட்சிய போக்கை கண்டித்தும், இப்பிரச்னையில் முதல்வர் மற்றும் துணை நிலை ஆளுநர் ஆகியோர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, அரசு ஊழியர் சம்மேளனத்தின் சார்பில்,

ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நேற்று மாவட்ட நலவழித்துறை அலுவலக வாயிலில் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். சம்மேளன கௌரவ தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வாயிற் கூட்டத்தில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலைவர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள், பி.ஆர்.டி.சி, பஜன்கோவா ஊழியர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Tags : NEMA ,Government Employees' Federation ,NRHM ,
× RELATED கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்