×

தோகைமலை சிந்தாமணிப்பட்டியில் இயற்கை வேளாண்மை திருவிழா

தோகைமலை, மார்ச் 13: தோகைமலை அருகே புழுதேரியில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் இயற்கை வேளாண் திருவிழா நடந்தது. கரூர் மாவட்டம் தோகைமலை அருகே புழுதேரியில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் மத்திய அரசின் (பி.கே.வி.ஒய்) பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண் திருவிழா மற்றும் பதிவுபெற்ற இயற்கை விவசாய குழுவுக்கு நிதியுதவி வழங்குதல் நிகழ்ச்சி சிந்தாமணிபட்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நபார்டு வங்கியின் துணை பொதுமேலாளர் பரமேஸ்குமார், வேளாண் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம், கடவூர் வேளாண் உதவி இயக்குனர் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இயற்கை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபடும் பொழுது ரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது குறைவதோடு மட்டுமல்லாமல் விளைப்பொருட்களுக்கு மூன்று மடங்கு அதிகம் விலை கிடைக்கின்றன. மேலும் இயற்கையில் விளைந்த உணவு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது கூடுதல் லாபம் பெறப்படுகிறது. உலகிற்கு நஞ்சில்லாத உணவுகளை வழங்கி ஆரோக்கியமாக வாழ வேண்டும். பருவ நிலை மாற்றத்தின் விளைவாக இயற்கை வளங்கள் குறைந்து கொண்டு வருகின்றது. இவற்றை நிவர்த்தி செய்ய இயற்கை விவசாய முறையை அனைவரும் பின்பற்றுவதோடு விவசாயத்தில் இரட்டிப்பு வருமானம் எடுக்க வேண்டும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக தொழில்முனைவோருக்காக இயற்கை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு இலவச பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் ஒன்றிணைந்து விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க வேண்டும். இதன் மூலம் தங்களது விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி இடைதரகர்கள் இன்றி அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய முடியும். பாரம்பரிய வாழ்வியல் மற்றும் உணவு பழக்கவழக்கம், வேளாண்மை துறையின் திட்டங்கள், செய்முறை விளக்கம், கண்டுணர்வு பயணம் மற்றும் கலந்தாய்வு, அங்கக சான்றிதழ் பெற்று விளைப்பொருட்களை மதிப்புகூட்டி விற்பனை செய்தல் உள்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

மேலும் வீரணம்பட்டி இயற்கை வயல் குழுவிற்கு ரூ.24 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. தொடர்ந்து அங்கக இடுபொருட்கள், பாரம்பரிய காய்கறி வகைகள், இயற்கை இடுபொருட்கள் மற்றும் விளைபொருட்கள் விவசாயிகளின் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக தொழில்முனைவோர் பயிற்சி மையத்தின் இயக்குனர் ரெங்கநாதபிரபு, வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை துணை இயக்குனர் ரவிச்சந்திரன், கடவூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ரத்தினம், தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலர் பரணி, இன்பசேவ சங்க இயக்குனர் விஜய், இயற்கை விவசாய ஆர்வலர் அருண், முன்னோடி இயற்கை விவசாயிகள் தங்கவேல், மனோகரன், சரோஜா உள்பட 150 க்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags : Natural Farming Festival ,
× RELATED வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்