கரூர் உழவர் சந்தை பஸ் நிறுத்தம் அருகில் நீண்ட நேரம் நின்று செல்லும் பேருந்துகளால் நெருக்கடி

கரூர், மார்ச் 13: உழவர்சந்தை பஸ் நிறுத்தம் அருகே பேருந்துகள் நீண்ட நேரம் நிற்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கரூர் பஸ் நிலையத்தில் இருந்து திண்டுக்கல், திருச்சி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் உழவர் சந்தை வழியாக செல்கிறது. உழவர் சந்தை பகுதியின் அருகே ஜவஹர் பஜார், படிக்கட்டுத்துறை போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் சாலைகள் பிரிகிறது. இந்நிலையில், சில நகரப்பேருந்துகளும், மினி பஸ்களும் உழவர் சந்தை பஸ் நிறுத்தத்தில் நீண்ட நேரம் நிற்பதால் பின்னால் வரும் வாகனங்கள் எளிதாக முன்னேறிச் செல்ல முடியாத நிலை ஏற்படுவதோடு, அடிக்கடி வாகன விபத்துக்களும் இந்த பகுதியில் ஏற்பட்டு வருகிறது.

எனவே உழவர்சந்தை நிறுத்தம் அருகே வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதை கண்காணித்து சீரமைக்க வேண்டும். இதே போல், சரக்கு வாகனங்களும் இந்த சாலையில் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இதுபோன்ற பிரச்னைகளை களையும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>