×

கிலோ ரூ.30 முதல் 35 வரை விற்பனை கரூர் மாவட்டத்தில் தென்னை உற்பத்தி குறைவால் இளநீர், தேங்காய் விலை உயர்வு

கரூர், மார்ச் 13: தென்னை உற்பத்தி குறைவால் இளநீர், தேங்காய் விலை உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டம் மாயனூரில் கதவணையில் இருந்து காவிரி தென்கரை வாய்க்கால், கட்டளைமேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் வழியாக கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்களுக்கு காவிரி பாசன நீர் செல்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக மழை பொய்த்துப்போனதால் பாசன வாய்க்கால்கள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரி மற்றும் அமராவதி ஆறுகளும் நீரின்றி வறண்டு போய்விட்டன. கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுத்ததாலும், மழையில்லாததாலும் காவிரியில் தண்ணீர் மட்டுமின்றி நிலத்தடிநீர் மட்டமும் குறைந்து கொண்டே வந்தநிலையில் கர்நாடக அணைகள் நிரம்பியதால் கடந்த 2 ஆண்டாக காவிரியில் தண்ணீர் வந்தது,

கரூர், தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகிய 8 வட்டாரங்களில் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டாரத்தில் ஒருபகுதி மட்டுமே காவிரி டெல்டா பாசன பகுதியில் இடம்பெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் மொத்த பரப்பளவில் 45 சதவீதம் காவிரி பாசன பகுதியில் இடம்பெற்றுள்ளது. மற்ற பகுதிகள் அமராவதி பாசனம் மற்றும் கிணற்றுப்பாசன பகுதியாகவே இருக்கிறது. அமராவதி ஆற்றிலும் கரூர் மாவட்டத்திற்கு உரிய நீர் கிடைக்கவில்லை. எனினும் கிணற்றுப்பாசனம் மூலம் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டாரங்களில் ஒருபகுதியில் தென்னை விளைச்சல் உள்ளது. எனினும் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில் இந்த ஆண்டு உற்பத்தி குறைந்து விட்டது.

இதனால் இளநீர் வரத்து இல்லை. பொள்ளாச்சி போன்ற ஊர்களில் இருந்தும் இளநீர் வரத்து இனிதான் துவங்கும். இதனால் இளநீர் கடைகள் முன்புபோல இல்லை. குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறது. ஒருஇளநீர் ரூ.55க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோடைவெயில் அதிகமானதும் இந்த விலை மேலும் உயர வாய்ப்பிருக்கிறது.. தேங்காய் விலையும் உயர்ந்து வருகிறது. உழவர்சந்தைகளிலேயே கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய தேங்காயாக இருந்தால் கிலோவுக்கு ஒருகாய் தான் வரும். உற்பத்திக்குறைவினால் விலை அதிகரித்த நிலையிலும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் தவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தேங்காயக்கு உரிய விலை கிடைக்கவில்லை. உழவர் சந்தைகளில் ரூ.45க்கு விற்பனையானாலும், விற்பனை செய்யாததாலும், கடைகளில் எங்களிடம் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இதனால் உற்பத்தி செய்பவர்களுக்கு விலையில்லை. பெரிய காய் ரூ.10 முதல் ரூ.15 வரை தான் கிடைக்கிறது. இதனை வாங்கி விற்பனை செய்பவர்களோ இந்த விலையை விட கூடுதலாக ரூ.15 வைத்து விற்கின்றனர். முன்பு போல பெரிதாக காய்கள் விளைவதில்லை. திருமணம் போன்ற பொதுநிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரிப்பதற்கு பெரிய காய்களையே விரும்புகின்றனர். தேங்காய் விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர்சந்தைகளில் கிடைக்கின்ற விலையையாவது கிடைக்க செய்ய வேண்டும். இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யும் போது இன்னும் கூடுதல் விலை கிடைக்கும் என்றனர்.

Tags : district ,Karur ,Rs ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்