×

ஓமலூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு

ஓமலூர்,  மார்ச் 13: ஓமலூர் அருகேயுள்ள பச்சனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை,  கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஒன்றிய பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவர்கள் தங்கி  பணியாற்றுவது இல்லை. போதிய மருந்துகள் கிடைப்பது இல்லை எனவும்,   மருத்துவர்கள் தங்களின் சொந்த கிளினிக்கிற்கு சென்று விடுவதால்,  கிராமப்புறங்களில் இருந்து வரும்  நோயாளிகள் சிகிச்சை பெற முடிவதில்லை எனவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று, பச்சனம்பட்டி  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கலெக்டர் ராமன் நேரில் ஆய்வு  நடத்தினார். அங்கு கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்,  வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து  கேட்டறிந்தார்.

 தொடர்ந்து  மருத்துவர்களை அழைத்து, அனைவருக்கும் மகப்பேறு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனையில் பாம்பு கடி, நாய் கடிக்கான  மருந்துகள் இருப்பில் உள்ளதா என கேட்டறிந்தார்.  அனைத்து ஆரம்ப சுகாதார  நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில், மருந்துகள் தேவையான அளவு  இருப்பில் உள்ளதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் தெரிவித்தார். மேலும், நோயாளிகள் வருகைக்கு ஏற்ப மருத்துவமனைகளில் தங்கி  மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து கர்ப்பிணி  பெண்களுக்கு, ஆரோக்கிய பெட்டகத்தை கலெக்டர் வழங்கினார்.

இதேபோல், தாரமங்கலம் பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது, தேசிய ஊரக வேலை திட்ட பணிகள், பிரதமரின் வீடுகட்டும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் நடைபெறும் பணிகளை, இந்த நிதியாண்டிற்குள் முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், தாரமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி பாபு, ஆணையாளர்கள் ஜெகதீஸ்வரன், அருள்பாரதி, பேரூராட்சி செயல் அலுவலர் குலோத்துங்கன், ஆய்வாளர் கோபிநாத் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Tags : Collector ,Government Primary Health Center ,Omalur ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...