×

சிமெண்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

சேலம், மார்ச் 13: சேலம் அருகே சிமெண்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி, பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தேக்கம்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி. டிரைவரான இவரது மனைவி சாந்தி (37). இதில் சாந்தி, கருப்பூர் அடுத்த வெள்ளாளப்பட்டியில் செயல்பட்டு வரும் சிமென்ட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அந்நிறுவனத்தில் நாள்தோறும் மாலையில் வேலை முடிந்தவுடன், சிமெண்ட் கல் தயாரிப்பிற்கான கலவை இயந்திரத்தை சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று மாலையும், சாந்தி அந்த இயந்திரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதை அறியாத ஒருவர், இயந்திரத்தை திடீரென இயக்கியதாக கூறப்படுகிறது.

இயந்திரத்தில் சிக்கிய சாந்தி, பலத்த காயமடைந்தார். சத்தம் கேட்டு வந்த சக பணியாளர்கள் அவரை மீட்டு, குரங்குச்சாவடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், வரும் வழியிலேயே சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சாந்தியின் உடலை எடுத்துச் சென்ற உறவினர்கள், தேக்கம்பட்டி-வெள்ளாளப்பட்டி சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் மற்றும் கருப்பூர் போலீசார், அவர்களை சமாதானம் செய்தனர். மேலும், கல் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மணி என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Woman Kills In Cement Mixing Machine ,
× RELATED வீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு