×

சேலம் கோட்டத்தில் பார்சல் வருவாய் அதிகரிப்பு ரயிலில் காய்கறிகளை அனுப்ப விவசாயிகள் முன்வர வேண்டும்

சேலம், மார்ச் 13:சேலம் ரயில்வே கோட்டத்தில் பார்சல் வருவாயை அதிகரிக்கும் வகையில் ரயில்களில் காய்கறிகளை அனுப்ப விவசாயிகள் முன்வர வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், சரக்குகள் கையாள்வதன் மூலம் ஈட்டப்படும் வருவாயை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் 40,759 டன் சரக்குகளை கையாண்டு, ₹16.50 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. சேலம் கோட்ட பகுதியில் இயங்கும் அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்களின் மூலம் பல்வேறு இடங்களுக்கு பார்சல் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த முன்பதிவிற்காக கோட்டம் முழுவதும், அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் ஒட்டுமொத்தமாக 33 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. சேலம், கோவை, மேட்டுபாளையம், திருப்பூர், ஈரோடு, கருர் வாடிக்கையாளர்கள், தங்களின் பொருட்களை பொட்டலங்களாக கட்டி ஏற்றி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்சல் ஏற்றி, இறக்கும் பணியை இலவசமாக செய்து கொடுக்கின்றனர். இந்நிலையில் தற்போது, கோட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில் விவசாயம் சார்ந்த பொருட்களை ஏற்றி இறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன்படி கோட்ட மேலாளர் சுப்பாராவ் ஏற்பாட்டில், பகுதி வாரியாக விவசாயிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். சேலம் மாவட்டம் தலைவாசலில் விவசாயிகள், வணிகர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்து, ரயில்களில் காய்கறிகள் உள்ளிட்ட விவசாய பொருட்களை அனுப்ப ஆதரவு கோரினார். அப்போது அவர் பேசியதாவது: ரயில் போக்குவரத்து விரைவானதாக இருப்பதால், காய்கறிகளை உரிய நேரத்தில் கொண்டு செல்ல முடியும். அதனால், விவசாயிகள் மற்றும் வணிகர்கள் தங்கள் காய்கறிகளை ரயில் மூலம் கொண்டு செல்ல முன் வர வேண்டும்.

முன்பதிவு செய்யப்பட்ட பார்சல்கள் அனைத்தையும், லக்கேஜ் வேன், காவலர் வேனில் ஏற்றி பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்கிறோம். வாடிக்கையாளர்கள் தங்கள் சரக்குகளை மொத்த அளவில், 23 டன்களுக்கு மேல் பதிவு செய்ய வேண்டும். காய்கறிகளின் போக்குவரத்துக்கு பிரத்யேக குளிர்சாதன பெட்டி பார்சல் வேன்கள் இருக்கிறது. பார்சல் முன்பதிவு உதவிக்காக, வணிக ஆய்வாளர்களை நியமித்துள்ளோம். சேலம் - 9003956957, திருப்பூர் - 9600956238, ஈரோடு - 9600956231, கோவை- 9003956955, கருர் - 8056256965 சேலம் டவுன் (நமக்கல், மேட்டூர், சின்னசேலம்) - 9003956956, மேட்டுப்பாளையம் - 9003956955 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் பேசினார். இக்கூட்டத்தில், தலைவாசல் பிடிஓ வெங்கட்ராமன், அசோக், 150க்கும் அதிகமான விவசாயிகள், வணிகர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Salem ,railway station ,
× RELATED உழவர்சந்தைகள் பழைய இடத்தில் மீண்டும்...