×

செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்த திண்டுக்கல் வாலிபர் 3 கொலை வழக்குகளில் இருந்தும் விடுதலை

சேலம், மார்ச் 13: சேலத்தில் செய்யாத குற்றத்திற்காக 3 ெகாலை பழியை சுமந்து  சிறையில் வாடிய திண்டுக்கல் வாலிபரை 3 வழக்கிலிருந்தும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். சேலத்தில் கடந்த மாதம் 1,2,3 ஆகிய நாட்களில் 3 கொலை சம்பவம் நடந்தது. இரவு நேரத்தில் சாலையோரங்களில் படுத்து தூங்கிய பிச்சைக்காரர்கள் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த ஆசாமி, அவர்களிடம் இருந்து பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இந்த 3 கொலைகள் தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ஆண்டிச்சாமி (22) என்பவரை கைது செய்த போலீசார் அவரை சேலம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த ராஜேஷ்குமார்(27) என்பவர், தலையில் கல்லை தூக்கி போட்டு ஒருவரை கொல்ல முயன்ற வழக்கில் திருச்சி ரங்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது சேலத்தில் 3 கொலைகளையும் நான் தான் செய்தேன் என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சேலம் போலீசார் ராஜேஸ்குமாரை கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, செய்யாத கொலைக்காக சிறையில் வாடிய திண்டுக்கல் வாலிபர் ஆண்டிச்சாமியை விடுதலை செய்ய வேண்டும் என டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். போலீசார் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதித்துறை நடுவர் செந்தில்குமார், திண்டுக்கல் வாலிபர் ஆண்டிச்சாமியை விடுதலை செய்து உத்தரவிட்டார். பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள வணிக வளாகம் மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த 2 கொலை வழக்கில் இருந்தும் விடுதலை செய்தார். இந்நிலையில் சூரமங்கலத்தில் நடந்த வடமாநில பிச்சைக்காரர் கொலையிலும் ஆண்டிச்சாமியை போலீசார் சிறையில் கைது செய்திருந்தனர். இந்த வழக்கில் 2 நாட்கள் காவலில் எடுத்து சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில் விசாரணை நடத்தினார்.

அப்போது ஆண்டிச்சாமி கூறுகையில், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான நான், போதை தலைக்கு ஏறினால் என்ன செய்கிறோம் என்று தெரியாது. ஊர் ஊராக சுற்றி பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தேன். சேலத்தில் தொடர்ச்சியாக 3 கொலைகள் நடந்ததை பத்திரிகையில் படித்து தெரிந்து கொண்டேன். இந்த கொலைகளையும் நான் தான் செய்தேன் என நானாகவே நினைத்து ஒப்புக்கொண்டேன்’ என கூறினார். இதனை அப்படியே வாக்குமூலமாக பதிவு செய்த போலீசார் நேற்று சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆண்டிச்சாமியை ஒப்படைத்தனர். ஆண்டிச்சாமியிடம் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் சிவா, அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ஆண்டிச்சாமியை சேலம் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். விடுதலையான வாலிபரை ஒரு நிமிடம் கூட சிறையில் வைக்க முடியாது என சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் கூறி விட்டார்.

2 கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்த 1வது நீதித்துறை நடுவர் செந்தில்குமார், ஆண்டிச்சாமியை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால் வழக்கில் இருந்து விடுதலையான பிறகு, போலீஸ் தான் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறி விட்டார். இதையடுத்து சூரமங்கலம் போலீசார் ஆண்டிச்சாமியை டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து மனநல சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அதே நேரத்தில் அவரது உறவினர்களிடம்  ஆண்டிச்சாமியை ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Tags : Dindigul ,
× RELATED திண்டுக்கல் அருகே தோட்டத்து...