×

அதிமுக ஆட்சியால் நத்தம் பகுதியில் வாடி வதங்கும் மா, வாழை, தென்னை தோப்புகள்: நீர்நிலைகளை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

நத்தம்: கடந்த அதிமுக ஆட்சியில் நத்தம் பகுதிகளில் உள்ள குளம், கண்மாய்கள், ஆறுகள், நீர்வரத்து கால்வாய்கள் என நீர்நிலைகள் அனைத்தும் முறையாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடப்பதால் விவசாயம் பாதிக்கிறது என விவசாயிகள் கூறுகின்றனர். நத்தம் பகுதியானது மலையும், மலை சார்ந்த பகுதியாகும். இப்பகுதியில் சின்னமீரான் கண்மாய், எட்டிகுளம், செட்டியார்குளம், அம்மன்குளம், செங்கன ஓடை, காக்கா குளம், பீபீ குளம், அய்யாகுளம், கட்டியக்காரன் குளம் உள்ளிட்ட சுமார் 400க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலும் கண்மாய் மற்றும் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம் நடக்கிறது. இப்பகுதியில் உள்ள மலைகளான கரந்தமலை, பூலாமலை, கரடிக்குட்டு, செம்புலி மலை, மொட்டைமலை, அழகர்மலை ஆகிய மலைப்பகுதிகள் உள்ளது.மழைக்காலங்களில் இந்த மலைகளில் பெய்யும் மழையானது திருமணிமுத்தாறு, விரிச்சலாறு, சம்பையாறு, மலட்டாறு போன்ற காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி வரும். அவ்வாறு வரும் வெள்ள நீரானது ஆங்காங்கே உள்ள கண்மாய், குளங்களில் தேங்கி, கிழக்கு பகுதியில் உள்ள ராமநாதபுரம் பகுதியைச் சென்றடையும். குறிப்பாக திருமணிமுத்தாறு நத்தம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஓடும் முக்கியமான காட்டாறு ஆகும். இதுபோன்ற காட்டாறுகளில் கடந்த காலங்களில் மழை மற்றும் கனமழைகளை தொடர்ந்து அவ்வப்போது வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும். பின்னர் தொடர்ந்து அந்த ஆறுகளில் நீரோட்டம் சுமார் 6 மாதங்கள் வரை ஓடும் நிலை இருந்தது. இந்த நீரோட்டத்தின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்பட்டு இப்பகுதியில் மா, தென்னை, புளிய மரங்கள் அதிகம் பசுமையுடன் காணப்பட்டன. இப்பகுதியில் திருமணிமுத்தாறு போன்ற ஆறுகள் தூர்வாரப்பட்டு கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதால்,நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து போனதால் மா, தென்னை, வாழை போன்ற தோப்புகள் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்பட்டு வாடி வதங்கி வருகிறது. மேலும், கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதிகளில் பருவமழை காலங்களில் போதிய மழை பெய்யாததால் பெரும்பாலான குளம், கண்மாய்கள் முழுமையாக நிரம்பாமல் வறண்டன. அவ்வப்போது பெய்யும் சாரல் மழையைக் கொண்டு பூமியின் மேல் உள்ள மணல்களின் ஈரப்பதத்தின் மூலம் விவசாயம் செய்யும் நிலை இருந்து வருகிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது, ‘அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நத்தம் பகுதியில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படாமல் உள்ளது. அதுபோல், முழுமையாக கனமழை பெய்து கண்மாய்கள் நிரம்பி பல ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனவே, திருமணிமுத்தாறை தூர்வாருவதுடன் அதனுடன் தொடர்புடைய கண்மாய்களுக்கான நீர்வரத்து கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கண்மாய்களுக்குள் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை வீணாக்காமல் கண்மாய்களில் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேணடும். அப்போது தான் நத்தம் பகுதி விவசாயம் செழித்து விவசாயிகளின் வாழ்க்கை மேம்படும்’ என்றனர்….

The post அதிமுக ஆட்சியால் நத்தம் பகுதியில் வாடி வதங்கும் மா, வாழை, தென்னை தோப்புகள்: நீர்நிலைகளை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nannam ,Nail ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவை தடுத்து மக்களை காக்கும்...