×

கெங்கவல்லியில் கடந்த ஆண்டைவிட குறைந்த தொகைக்கு வாரச்சந்தை ஏலம் எடுப்பு

கெங்கவல்லி, மார்ச் 13: கெங்கவல்லி பேரூராட்சி வாரச்சந்தை ஏலத்தை, பினாமி பெயரில் கடந்தாண்டை விட ₹56 ஆயிரம் குறைவாக ஏலம் எடுத்ததால், ஏலத்தை ரத்து செய்து புதிதாக நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருதரப்பினர் வலியுறுத்தி உள்ளனர். கெங்கவல்லி  பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கெங்கவல்லி -ஆத்தூர் மெயின்ரோடு அண்ணா சிலை பகுதியில்,  வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சந்தை கூடுகிறது. சுமார் 150க்கும்  மேற்பட்ட வியாபாரிகள், இந்த சந்தையில் கடை போடுகின்றனர். இந்த சந்தையில் உள்ள  கடைகளுக்கு சுங்கம் வசூலிக்கும் பணிக்கு, ஆண்டுதோறும் மார்ச் மாதம் ஏலம்  விடுவது வழக்கம். அதன்படி நடப்பு 2020-21ம் ஆண்டுக்கான ஏலம், நேற்று கெங்கவல்லி  பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் அல்போன்ஸ் தலைமையில் நடந்தது.

காலை  10 மணிக்கு தொடங்கிய ஏலத்தில், 6 ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர். இதில்  கெங்கவல்லியை சேர்ந்த ராமர் என்பவர் 2 லட்சத்து 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கு  ஏலம் எடுத்தார். இது கடந்த 2019-20 ம் ஆண்டு ஏலத்தொகையை விட 56 ஆயிரத்து  600 ரூபாய் குறைவாகும்.  இதுகுறித்து கெங்கவல்லி பேரூராட்சி செயல் அலுவலர்  அல்போன்சா கூறுகையில், ‘இந்த ஆண்டு வாரசந்தை ஏலம் ராமர் என்பவர்  எடுத்துள்ளார். கடந்த ஆண்டை விட குறைவாக ஏலம் எடுக்கப்பட்டு உள்ளது.  இதுகுறித்து பேரூராட்சி இயக்குனரிடம் தெரிவித்து, அவரது ஒப்புதலுக்கு  பின்பே, மறு ஏலம் நடத்துவது குறித்த முடிவு அறிவிக்கப்படும்,’ என்றார்.

கடந்த  3 ஆண்டுகளாக கெங்கவல்லி பேரூராட்சி வாரசந்தை குத்தகையை செந்தில்குமார்  என்பவர் எடுத்தார். அவர் ₹ 2 லட்சம் வரை நிலுவை வைத்துள்ளார். இதுதொடர்பாக, பேரூராட்சி  சார்பாக கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அவர் தனது  பினாமியாக ராமர் என்பவர் மூலம் ஏலம் எடுத்திருப்பதாக ஏலத்தில் கலந்து  கொண்டவர்கள் தெரிவித்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஏலத்தை ரத்து செய்து,  முறையாக ஏலத்தை நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kengavalli ,
× RELATED அரசமரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்