×

மாவட்டம் முழுவதும் பூட்டிய வீடுகளை உடைத்து நகை திருடிய 2 பேர் கைது

நாமக்கல், மார்ச் 13: நாமக்கல் மாவட்டத்தில், பூட்டிய வீடுகளை உடைத்து நகை திருடிய 2 மர்ம ஆசாமிகளை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 33 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே அணியாபுரம்புதூரை சேர்ந்தவர் சுப்பரமணியம். இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். திருச்செங்கோட்டை அடுத்த கொசவம்பாளையம், எஸ்.எஸ்.நகரில் பூட்டியிருந்த பாலமுருகன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ₹5ஆயிரம் ஆகியவை திருடுபோனது. மேலும், கருவேப்பம்பட்டி ஜெயசக்தி சிட்டி நகரை சேர்ந்த சவிதா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 3 பவுன் நகைகள், 6 ஜோடி வெள்ளி கொலுசுகள், நாமக்கல் மாருதி நகரைச் சேர்ந்த சுகந்தி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த  2 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் திருடு போனது.

இந்த தொடர் திருட்டுகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய,  எஸ்பி அருளரசு தனிப்படை அமைத்தார். தனிப்படை இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி, இந்த திருட்டுகளில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் புத்தூரை சேர்ந்த துரை (எ) துரைசாமி (38)என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 25 பவுன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல், ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டை அடுத்த ஆண்டிக்காடு ரமணி என்பவரது வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க தாலி திருட்டு போனது. புதுச்சத்திரத்தை அடுத்த  கூனவேலம்பட்டிபுதூர், குமரன் நகரை சேர்ந்த செந்தில்குமார்  வீட்டில் 7 பவுன் தங்கநகை திருட்டு போனது. இந்த திருட்டுகளில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த சங்கர் (எ) சிவாவை (33) என்பவரை, எஸ்ஐ ரம்யா கைது செய்தார். அவரிடம் இருந்து 8 பவுன் தங்கநகை மீட்கப்பட்டது.

Tags : houses ,jewelery ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...