×

அஞ்செட்டி அருகே பள்ளி ஆசிரியர்களை விரட்டிய யானை

தேன்கனிக்கோட்டை, மார்ச் 13: அஞ்செட்டி அருகே கெம்பகரை வனப்பகுதியில் ஒற்றை யானை விரட்டியதில், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மயிரிழையில் உயிர் தப்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா கெம்பகரை கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர் லாரன்ஸ் உள்பட 4 ஆசிரியர்கள், நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து தேன்கனிக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். கெம்பகரை -கேரட்டி இடையே வனப்பகுதியில் சென்ற போது, திடீரென ஒற்றை யானை ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்தது. யானையை பார்த்த ஆசிரியர்கள் சுதாரித்துக்கொண்டு, இருசக்கர வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்தியுள்ளனர். சிறிது நேரத்தில் அந்த யானை, சாலையை கடந்து காட்டுப்பகுதிக்குள் சென்றது.

அதனை கவனித்த ஆசிரியர்கள், யானை சென்று விட்டதாக எண்ணி, இருசக்கர வாகனத்தை செலுத்தியபோது காட்டிலிருந்து திரும்பி வந்த ஒற்றை யானை, ஆசிரியர்களை நோக்கி ஆக்ரோஷமாக ஓடி வந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியர்கள், அங்கிருந்து வாகனங்களை வேகமாக இயக்கி மயிரிழையில் உயிர் தப்பினர். அஞ்செட்டி வனத்தை ஒட்டியுள்ள சாலைகளில் காலை, மாலை நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வனப்பகுதியில் இலை-தழைகள் காய்ந்து சருகாகியுள்ளது. மேலும், நீர்நிலைகளும் வறண்டு காணப்படுகிறது.

காய்ந்து போன தீவனங்களை உண்ணும்போது விலங்கினங்களுக்கு அதிகளவில் தாகம் ஏற்படுகிறது. இதனால், தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. விலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து, நாங்கள் ஓரளவுக்கு சமாளித்து வருகிறோம். ஆனால், வெளியிடங்களிலிருந்து வந்து பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியை முடுக்கி விட வேண்டும்,’ என்றனர்.

Tags : school teachers ,Anjetti ,
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா