×

மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரவிழா துவக்கம்

கிருஷ்ணகிரி, மார்ச் 13:   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரவிழா தொடங்கியது. கிருஷ்ணகிரியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரவிழா வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தும் நோக்கில் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 1956ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி நினைவு கூறும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா வரும் 17ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. அதில் கணினித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் அம்மா மென்தமிழ் -தமிழ்ச் சொல்லாளர் ஒருங்குறி பயன்பாடு குறித்தப் பயிற்சியும், ஆட்சிமொழி மின்காட்சியுரை குறித்த பயிற்சியும், தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை மாணவர்கள் 5 பேரை கொண்ட குழுவினரைக் கொண்டு, ஆட்சிமொழிப் பட்டிமன்றமும், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தல், வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து கூட்டமும், ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டமும், தமிழில் பெயர்ப்பலகை அமைக்க வலியுறுத்தி தமிழ் அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. எனவே, நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Commencement ,district ,Tamil Language Law Festival ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...