×

போச்சம்பள்ளியில் கொரோனா பீதியால் சிக்கன் கடைகள் மூடல்

போச்சம்பள்ளி, மார்ச் 13:  கொரோனா பீதியால் போச்சம்பள்ளி பகுதியில் 100க்கும் மேற்பட்ட சில்லி சிக்கன் கடைகள் மூடப்பட்டதால், ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நூற்றுக்கணக்கான கறிக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கோழிகளை, வெளி மாவட்ட வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர். மேலும், உள்ளூர் வியாபாரிகளும் சில்லரையில் வாங்கிச் சென்று சிக்கன் கடை மற்றும் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார்கள். போச்சம்பள்ளி பகுதியில் 50க்கும் மேற்பட்ட சிக்கன் கடைகள் உள்ளன. மேலும், மாலை நேரங்களில் சாலையோரம் 100க்கும் மேற்பட்ட சில்லி சிக்கன் கடைகள் அணிவகுப்பது வாடிக்கை. இந்நிலையில், கோழி இறைச்சி மூலம் கொரோனா பரவுவதாக வதந்தி பரவியதால், விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால், ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போச்சம்பள்ளியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வரும் மாதேஷ் என்பவர் கூறுகையில், ‘நான் பல வருடங்களாக சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறேன். இதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்தது. கொரோனா பீதியால் கடந்த சில நாட்களாக வியாபாரம் படுத்து விட்டது. சில்லி சிக்கன், சிக்கன் ரைஸ் சாப்பிட யாரும் முன் வராததால்,  குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் யாரும் சிக்கன் சாப்பிடக்கூடாது என கூறவில்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியால், மக்கள் பயந்து சிக்கன் சாப்பிட மறுத்து வருகிறார்கள். அதன் காரணமாக 3 நாட்களாக கடையை மூடிவிட்டோம்,’ என்றார்.

Tags : shops ,Choron ,panic ,Pochampally ,
× RELATED விதிமீறிய 6 கடைகளுக்கு சீல்