×

தர்மபுரி அருகே சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்

தர்மபுரி, மார்ச் 13: தர்மபுரி அருகே, சிதிலமடைந்த நிலையில் உள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி அருகே, முக்கல்நாயக்கன்பட்டியில் 4 ஆண்டுகளுக்கு முன், மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் சார்பில், ₹1 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த கூடத்தில், கிராமப்புற தூய்மை பணியாளர்கள் 5 பேர், மண்புழு உரம் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஓராண்டுக்கு முன் இந்த கூடத்தின் மேற்கூரை சூறைக்காற்றுக்கு சேதமானது. மேலும், இதை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்பு திரைகளும் கிழிந்தன.

இதனால், இந்த கூடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் பணியாளர்கள் உள்ளனர். தற்போது வெயில் அதிகரித்துள்ளதால், இதன் அடியில் நின்று மண்புழு உரம் தயாரிக்க முடியாமல், பணியாளர்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, சிதிலமடைந்த நிலையில் உள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தின் மேற்கூரை மற்றும் சுற்றியுள்ள திரைகளை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : earthworm manure plant ,Dharmapuri ,
× RELATED தர்மபுரியில் அறுவடை தாமதத்தால்...