×

தர்மபுரியில் சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவால் சீர்கேடு

தர்மபுரி, மார்ச் 13: தர்மபுரி நகரில் சாலைகளில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தர்மபுரி டவுன் பகுதிக்குட்பட்ட பல இடங்களில் தாபாக்கள், கறிக்கோழி விற்பனை கடைகள், சில்லி சிக்கன் கடைகள் என 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து கோழிக்கழிவுகள், அழுகிய முட்டைகள், முட்டை ஓடுகள் ஆகியவை முறையாக அகற்றப்படாமல் குண்டல்பட்டி, சனத்குமாரநதி, திருப்பத்தூர் சாலை, பச்சியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் மெயின் ரோட்டில் கொட்டப்படுகின்றன. நகராட்சி நிர்வாகம் கோழிக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றாததால், பலநாட்கள் தேங்கி கிடக்கும் கோழிக்கழிவுகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தர்மபுரி நகரில் ஒரு சில கோழிக்கறி விற்பனை நிலையங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் இருந்து கோழிக்கழிவுகளை, சாலையில் கொட்டி செல்கின்றனர். இவற்றை நகராட்சி நிர்வாகம் தினமும் அகற்றுவதில்லை. இதனால் அந்த பகுதியில் கழிவுகளில் இருந்து கோழி இறகுகள் ரோட்டில் பறக்கின்றன. துர்வாடை வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, கோழிக்கழிவுகளை ரோட்டில் கொட்டுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Dharmapuri ,road ,
× RELATED விதிமுறைகளை மீறும் இறைச்சி கடைகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?