×

காக்களூரில் கடைகளுக்கு சப்ளை செய்ய பதுக்கிய ரூ2 லட்சம் குட்கா பொருள் பறிமுதல்

திருவள்ளூர், மார்ச் 13: தமிழக அரசு கடந்த 2013ம் ஆண்டு முதல் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்தது. அவற்றின் விற்பனையை தடுக்கவும், உத்தரவை மீறி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் விதியை மீறி திருவள்ளூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தடை செய்த புகையிலை பொருட்களின் விற்பனை அமோகமாக நடக்கிறது. தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதில் சிரமம் உள்ளதால், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, பல மடங்கு விலையில் விற்கின்றனர்.

தடை செய்யப்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வந்தாலும், தடையை மீறி விற்பனை நடந்து கொண்டு தான் வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை திருவள்ளூர் தாலுகா போலீசார் காக்களூர் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடைகளுக்கு குட்கா சப்ளை செய்ய வந்த வியாபாரி ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் காக்களூர் எம்பயர் சிட்டி சேசு (48) என்பதும், வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பதும் தெரிந்தது.

இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்து, விற்பனைக்காக வைத்திருந்த ₹2 லட்சம் மதிப்பு குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து சேசுவை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Kakaloor ,shops ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு...