×

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்களில் புரோக்கர்கள் தொல்லை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி, மார்ச் 13: கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகத்தில் புரோக்கர்கள் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி உள்ளது. இங்கு சுமார் 3 லட்சம்  மக்கள் வசித்து வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேர்ப்பு, இ-சேவை மையம், ஆதார் முகவரி மாற்றம்,  பட்டா பெறுதல், முதியோர் ஊக்கத்தொகை, உள்ளிட்ட பல்வேறு விதமான சான்றிதழ்களை வாங்குவதற்கும், பாகப்பிரிவினை, நிலம் அளவிடுதல் உள்ளிட்ட பணிகளுக்கும் தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.

தற்போது கும்மிடிப்பூண்டியில் நிலங்களை அளக்கும் பணி முழுக்க புரோக்கர்கள் கையில் உள்ளதால் இவர்களை தாண்டி பொதுமக்கள் அதிகாரிகளை சந்திக்க முடியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் கும்மிடிப்பூண்டியில் நில அளவைக்காக உரிய விண்ணப்பம் பெற்று பணம் செலுத்தி வருபவர்களை 1 வருடம் கூட நில அளவர்கள் அலையவிடுகின்றனர். ஆனால் புரோக்கர்கள் மூலம் சென்றால் 1 வாரத்திலேயே முடித்து விடுவதாக கூறப்படுகிறது. மேலும் நில அளவர்கள் அலுவலக செல்போனை எப்போதும் அணைத்து வைத்திருப்பதாகவும் அலுவகத்திற்கு கூட ஒழுங்காக வருவதில்லை எனவும் கூறப்படுகிறது.

பத்திரப்பதிவு துறை மற்றும் வட்டாட்சியர் அலுவகத்தில் புரோக்கர்களின் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : brokers ,area ,Gummidipoondi ,
× RELATED சிப்காட்டிற்கு இடம் ஒதுக்கியதை...