×

கொரோனா வைரஸ் பரவும் நிலையில் தமிழக-ஆந்திர எல்லையில் மருத்துவக் குழு சோதனை

ஊத்துக்கோட்டை, மார்ச் 13: கொரோனா வைரஸ் பரவுவதன் எதிரொலியால் ஊத்துக்கோட்டை தமிழக - ஆந்திர எல்லையில், ஆந்திராவில் இருந்து வரும் லாரி, பஸ் டிரைவர்கள் மற்றும் பயணிகளிடம் மருத்துவ குழுவினர் தீவிர  சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குனர் ஜவகர்,   சென்னை - திருப்பதி சாலையில் திருவள்ளூர் மாவட்டம்  ஊத்துக்கோட்டை தமிழக - ஆந்திர எல்லை பகுதியில்  -  ஊத்துக்கோட்டை போலீஸ் சோதனை சாவடி அருகில்  கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைத்து வாகன ஓட்டிகளிடம்  சோதனை செய்யும் படி உத்தரவிட்டார்.

அதன்பேரில், எல்லாபுரம் ஒன்றிய மருத்துவர் பிரபாகரன் தலைமையில்  மேற்பார்வையாளர் ஜெகந்நாதலு, சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணி, நித்தியானந்தன் மற்றும் பணியாளர்கள் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் லாரி மற்றும் பஸ் டிரைவர்கள், பஸ்சில் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா? என காய்ச்சல் கண்டறியும் கருவி மூலம் சோதனை மேற்கொண்டனர்.  மேலும் கை கழுவுதல், முகமூடி பயன்படுத்துதல் ஆகியவை குறித்து அறிவுறுத்தப்பட்டது. மேலும், அந்திராவில் இருந்து வரும் வாகனங்களின் டயர்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. (ஸ்பிரே அடிக்கப்பட்டது). பின்னர், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் நேற்று காலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனஞ்செழியன் தலைமையில் மருத்துவ குழுவினர் கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள், பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகின்றது? அதன் அறிகுறிகள், கண்டறியும் முறைகள், சிகிச்சை, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கை கழுவும் முறைகள் குறித்தும் விளக்கினர். மேலும், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வரும் சுமார் 70 பேருந்துகளுக்கு சுகாதாரத்துறையினர்  நுண்கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதில், பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், மவட்ட பூச்சியியல் வல்லுனர் மதியழகன் சுகாதார ஆய்வாளர்கள் முஸ்தபா, வினோபா, யுவராஜ்  உட்பட சுகாதாரத்துறை, பேரூராட்சி அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு
கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில், ‘‘ கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. குறிப்பாக திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை. ஒருவர் மட்டும் சந்தேகத்தின் பேரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பாதிப்பு இல்லை என தெரிந்தவுடன் வீடு திரும்பி உள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்த 60 நபர்களை 24 நாட்கள் கண்காணிப்பில் வைத்துள்ளோம். அவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது’’ என்றார்.

Tags : Tamil Nadu ,border ,Andhra Pradesh ,
× RELATED படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்;...