×

கார் மீது வெடிகுண்டு வீசிய விவகாரம் நீதிமன்றத்தில் சரணடைந்த 7 பேரை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி: சைதாப்ேபட்டை கோர்ட் உத்தரவு

சென்னை, மார்ச் 13: அமெரிக்க  துணை தூதரகம் அருகே ரவுடிகள் சென்ற கார் மீது வெடி குண்டு வீசிய விவகாரத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்த 7 பேரை 5 நாள் காவலில் விசாரணை நடத்த போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்கா துணை தூதரகம் அருகே கடந்த 3ம் தேதி பிரபல ரவுடிகளான சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி சென்ற சொகுசு கார் மீது பைப்கில் வந்த மர்ம நபர்கள் 2 வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இருந்து இரண்டு ரவுடிகளும் உயிர் தப்பினர். இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் தி.நகரை ேசர்ந்த கல்லூரி மாணவன் மகேஷ் (20) உள்பட 2 பேரை கைது செய்தனர்.
 
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தண்டையார்பேட்டையை ேசர்ந்த குமரேசன் (30), ராஜசேகர் (28), பிரசாந்த் (25), ஜான் (எ) ஜான்சன் (35) ஆகியோர் கடந்த 5ம் தேதி மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதேபால், கடந்த வாரம் தென்காசி நீதிமன்றத்தில் சதீஷ், ஹரீஷ், தமிழ்செல்வன் (எ) செல்வா என 3 பேர் சரணடைந்தனர். சரணடைந்த 7 பேரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி மேற்கண்ட 7 பேரையும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனனர். இதற்கிடையே வெடிகுண்டு வீச்சு வழக்கில் தொடர்புடைய 7 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த தேனாம்பேட்டை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நேற்று மாஜிஸ்திரேட் ஜெயசுதாகர் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது சேலம் மத்திய சிறையில் இருந்து 7 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைதொடர்ந்து 7 பேரிடம் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் ஜெயசுதாகர் அனுமதி வழங்கினார். அதைதொடர்ந்து போலீசார் 7 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பிறகு தான் ரவுடிகள் மீது வெடிகுண்டு வீசிய பின்னணி குறித்து முழு விபரங்கள் வெளியே வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Court ,persons ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...