×

ஏரியில் மண் அள்ள வந்த பொக்லைனை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சை, மார்ச் 13: தஞ்சை அருகே ஏரியில் மண் அள்ள வந்த பொக்லைனை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தஞ்சை அடுத்த கொல்லாங்கரை பகுதியில் அன்னுவத்தி ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தற்போது ஏரியில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த ஏரியில் மண் அள்ளுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் மனு கொடுத்தனர். அதன்படி ஏரியில் மண் அள்ளப்படாமல் இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று காலை ஒருவர் பொக்லைன் இயந்திரத்துடன் ஏரிக்கு வந்து மண் வெட்ட முயன்றார். இந்த தகவல் கிடைத்ததும் கொல்லாங்கரை பொதுமக்கள் ஒன்று திரண்டு அன்னுவத்தி ஏரிக்கு வந்து பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனர். அப்போது அரசு அனுமதியோடு தான் மண் அள்ள வந்தோம் என்று டிரைவர் கூறினார். அதற்கு பொதுமக்கள், நாங்கள் ஏற்கனவே மணல் அள்ளக்கூடாது என்று கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். அவர்களும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறினர். அப்படி இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் எப்படி அரசு அனுமதியோடு மண் அள்ள வந்துள்ளீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொக்லைன் இயந்திரத்தை அங்கேயே விட்டு விட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அபபோது அந்த வழியாக வந்த பஸ்களை வழிமறித்து போராட்டம் நடத்தினர். பஸ்சில் தேர்வெழுத செல்லும் மாணவர்கள் இருந்ததால் பஸ்சை மறிப்பதை விட்டு விட்டு அங்கிருந்து அனுப்பி விட்டனர். இருப்பினும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களும் பங்கேற்றனர். இந்த தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அலுவலர் சுகந்தி மற்றும் அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தாலுகா போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags : road ,lake ,
× RELATED ‘எங்கு பார்த்தாலும் குண்டும்,...