×

கோவில்பட்டியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, மார்ச் 13: பணி  நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கோவில்பட்டியில் பயணியர் விடுதி  முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் மரகதலிங்கம் தலைமை  வகித்தார். தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர்  சீனிவாசன், ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் இலா.பாரதி, கன்னியாகுமரி மாவட்ட  தலைவர் பாஸ்கரன், தென்காசி மாவட்டத் தலைவர் சண்முகவேல், நெல்லை மாவட்டத் தலைவர்  ரவி, மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் ராஜசேகர்  முன்னிலை வகித்தனர்.   தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன்  சிறப்புரையாற்றினார்.

இதில் திரளாகப் பங்கேற்ற டாஸ்மாக் பணியாளர்கள், கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி  வரும் சுமார் 25 ஆயிரம் டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்து  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசின் கொள்கை முடிவாலும், நீதிமன்ற  உத்தரவுகளாலும் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால் பணி இழப்புக்கு  ஆளாகும் பணியாளர்களை அரசு துறை மற்றும் சார்பு நிறுவனங்களில் கல்வித்தகுதி,  சீனியாரிட்டி அடிப்படையில் நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும். டாஸ்மாக்  கடைகளில் அட்டைகளை கான்ட்ராக்ட் முறையில் விற்பனை செய்யும் நடைமுறையை  கைவிட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் அரசு நிர்வாகமே நேரில் வந்து  டாஸ்மாக் பணத்தை வசூல் செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.  மாவட்ட  பொருளாளர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.


Tags : demonstration ,Task Force ,Kovilpatti ,
× RELATED நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அதிமுக...