×

வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையோரத்தில் இயற்கை சூழலுடன் நிறைந்த வன மரபியல் பூங்கா

கூடுவாஞ்சேரி, மார்ச் 13: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள வண்டலூர் - கேளம்பாக்கம் செல்லும்  சாலையோரத்தில் வன மரபியல்வள மர பூங்கா, 20 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வன ஆராய்ச்சி நிலையம் சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு, 43 வகை மூங்கில்கள், 325 வகை மூலிகை செடிகள், 30 வகையில் அழிய கூடிய நிலையில் உள்ள அரியவகை மூலிகை செடிகள், 30 வகை ஆல, அரச மரங்கள், 120 வகை தைல மரங்கள், 62 வகையான ஆர்கிட் இனங்கள் கண்டறியப்பட்டு சிறந்த முறையில் பாதுகாத்து பராமரிக்கப்படுகின்றன. கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து அழியும் தருவாயில் உள்ள மர இனங்களை கண்டறிந்து அதனை சேகரித்து வன ஆராய்ச்சி பிரிவின் மூலம், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையோரம் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 300 வகையில் வன மரபியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.  அங்கு சென்றாலே மூலிகை வாசனை கவரும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களை வீணாக்காமல் எப்படி பயன்படுத்துவது என்பதற்காக, பிளாஸ்டிக் பாட்டில்களில் அழகிய செடிகளை வைத்து காட்சி படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, அங்கு கிடைக்கும் மூங்கில்களை வைத்து தடுப்புச்சுவர்களையும் அழகாக அமைத்துள்ளனர். அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணமாக ஒவ்வொரு செடியிலும், அதன் முழு விவரத்தை, பதாகைகளில் குறிப்பிட்டு நட்டு வைத்துள்ளனர். குறிப்பாக கோடை விடுமுறை வர உள்ளதால், சுற்றுலா பயணிகள் வன மரபியல் பூங்காவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து துணை வன பாதுகாவலர் சத்தியமூர்த்தி கூறுகையில், இங்கு 300 வகை மர வகைளை தேர்வு செய்து, நட்டு பராமரிக்கிறோம். இதையொட்டி, இயற்கை ஆர்வலர்களும், தாவரவியலை விரும்பும் மக்கள் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

வருங்காலத்தில் இந்த மர பூங்கா சென்னையில் மிக பெரிய சுற்றுலா தலமாக மாறும். காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை அரசு பரிசீலனை செய்ய, விரைவில் அரசுக்கு மனு அளிக்க உள்ளோம் என்றார். இதுதொடர்பாக, பார்வையாளர்களிடம் கேட்டபோது, இங்கு நடைபயிற்சி மேற்கொள்ளும்போது மாசு பரவாமல், இயற்கை காற்றோடு உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது. தற்போது மரங்கள், செடிகளை அழித்து வருகிறோம். ஆனால், இந்த மர வகை பூங்காவில் நமக்கு தெரியாத செடிகள், மரங்கள், சுமார் 500 வகை மூலிகை செடிகள், மரவகைகளை நட்டு, அதற்கு உண்டான பெயர் பலகையில் எழுதி வைத்துள்ளனர். இதனால், என்ன வகை செடிகள் இருக்கின்றன என்பதை எளிதில் அறிய முடிகிறது. பார்வையாளர்களுக்கு நேரத்தை கூடுதலாக ஒதுக்கினால் மக்கள் அதிகமாக வருவார்கள் என்றனர்.

Tags : Vandalur - A Wildlife Heritage Park ,Kelambakkam Road ,
× RELATED வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில்...