செங்கல்பட்டு அடுத்த திருமணி - கண்டிகை இடையே ரயில்வே சுரங்கப்பாதை விரைவில் திறப்பு: அதிகாரிகள் தகவல்

செங்கல்பட்டு, மார்ச் 13: செங்கல்பட்டு அடுத்த திருமணி - கண்டிகை இடையிலான ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் முடியும் நிலைக்கு வந்துள்ளன. இதனால், இந்த பாதை, விரைவில் திறக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த திருமணி - கண்டிகை செல்லும் சாலையின்  இடையே ரயில்வே கேட் உள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்ளுக்கு எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் செல்வதற்காக மோசிவாக்கம், கண்டிகை  ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படும். இதனால், செங்கல்பட்டில் இருந்து திருமணி வழியாக மோசிவாக்கம், கண்டிகை, ஜானகிபுரம்,  வீரகுப்பம், மேட்டு மாம்பாக்கம், தண்டரை, சோகண்டி  ஆகிய கிராமங்களுக்கு செல்லும் மக்கள், தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்து, ரயில்வே கேட் திறக்கும் வரை காத்திருந்து பெரும் சிரமம் அடைகின்றனர்.

இதனால் காலை, மாலை, நேரங்களில் குறித்த நேரத்துக்கு மாணவர்கள், பொதுமக்கள், கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு, கல்வி நிலையங்களுக்கு, செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. மேலும், செங்கல்பட்டில் இருந்து திருமணி - கண்டிகை, மேசிவாக்கம் சொகண்டி வழியாக திருக்கழுக்குன்றம் செல்லும் அரசு பஸ்களும் இந்த ரயில்வே கேட் மூடப்படுவதால் அரைமணி முதல் ஒருமணி நேரம் வரை காத்திருந்து செல்லும் அவலநிலை இருந்தது. இதனால், இந்த பகுதியில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் வாகன ஓட்டிகளின் நீண்ட ஆண்டு  கோரிக்கையின்பேரில் திருமணி - கண்டிகை  இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 6 மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டு, தற்போது, 100 சதவீத பணிகள் முடிந்து, விரைவில் சுரங்கப்பாதை செயல்பட தொடங்க உள்ளது.

இதனால், அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பல ஆண்டுகளாக ரயில்வே கேட் அடிக்கடி மூடுவதால் குறித்த நேரத்துக்கு பள்ளி, வேலை, மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது, சுரங்கப்பாதை பணி முடிக்கப்பட்டுள்ளது. இதனால், குறித்த நேரத்தில் சுரங்கப் பாதையை பயன்படுத்தி செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு எளிமையாக வாகனங்களில் சென்று வருவார்கள். அரசு பஸ்களும் தாமதமின்றி சென்றுவரும்’ என்றனர்.

Related Stories: