×

ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் குண்டும் குழியுமான தார்சாலை: விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்

திருப்போரூர், மார்ச் 13: ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. அதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. குளுக்கோஸ், ஷாம்பு, உயிர் காக்கும் மருந்துகள், ஊசிகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் 30க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இங்கு தொடங்கப்பட்டன. இதில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர். இந்த தொழிற்பேட்டை வளாகத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கதவு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. இதனால், எப்போதும் தொழிற்பேட்டையில் நுழைவாயில் திறந்தபடி கிடக்கிறது.

மேலும், கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்வதால் அனைத்து சாலைகளும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதையொட்டி சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் தொழிற்பேட்டையின் உள்ளே வருவதற்கு பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. அதேபோன்று தொழிற்சாலைக்கு வேலை நிமித்தமாக செல்லும் பல தொழிலாளர்கள் சைக்கிள் மற்றும் பைக்கில் பயன்படுத்தி வருகின்றனர். சாலை தரமற்று இருப்பதாலும் பல இடங்களில் சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சி அளிப்பதாலும் அவர்கள் கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து அரசுக்கு கணிசமாக தொழில் வரி, சொத்து வரி, உரிமக் கட்டணம் ஆகியவை வருவாயாக கிடைக்கிறது.

ஆனால், தொழிற்பேட்டையின் பராமரிப்பு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனமான சிட்கோ நிர்வாகத்திடம் இருப்பதால் மாவட்ட நிர்வாகமோ, ஊராட்சி ஒன்றிய நிர்வாகமோ எந்த வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, சிட்கோ நிர்வாகம் ஆலத்தூர் தொழிற்பேட்டை வளாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : area ,Alathur Sitko ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...