×

திருப்பூர் மாநகரில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை தாராளம்

திருப்பூர், மார்ச் 13:திருப்பூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிளாஸ்டிக்காலான பைகள், உணவு தட்டுகள், தேநீர் குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சு குழல் உள்பட ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுவதால் அவற்றை பயன்படுத்தவும், விற்கவும் கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால், அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து கடைகளுக்கு பைகள், பாத்திரங்கள் எடுத்துச் சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர். அதிகாரிகளும் கடைகளில் அவ்வப்போது ஆய்வு நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததால் அவற்றின் பயன்பாடு வெகுவாக குறைந்து இருந்தது.

 இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருவதால், வியாபாரிகள் சிலர் மறைமுகமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகளுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். இதனால், பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு மீண்டும் பிளாஸ்டிக் பைகளில் வைத்து கொடுக்கப்படுகிறது. திருப்பூர் மாநகரில் உள்ள சாலையோர உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதை கண்கூடாக காண முடிகிறது. இதனால், திருப்பூர் மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடைகளில் மீண்டும் ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tirupur Municipality ,
× RELATED திருத்தங்கல் நகராட்சியில் ரூ.10...