×

மஞ்சூர் கோவை சாலை சீரமைப்பு பணி மந்தம்

மஞ்சூர், மார்ச் 13:  நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு சாலை வசதி உள்ளது. பல ஆண்டுகள் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்த இந்த சாலை அரசின் மூன்றாவது மாற்று பாதை அறிவிப்பை தொடர்ந்து சுமார் ரூ.48 கோடி மதிப்பில் கடந்தாண்டு சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டது. மஞ்சூர் மின்வாரிய மேல்முகாம் பகுதியில் இருந்து வெள்ளியங்காடு வரை சுமார் 40 கி.மீ. தூரம் கொண்ட இந்த சாலையில் இதுவரை பாதி துாரம் மட்டுமே தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பள்ளம் பகுதியில் துவங்கி பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வெறுமனே கொத்தி விடப்பட்டுள்ளது. இதனால் சாலை கரடு, முரடாக மாறி போயுள்ளதுடன் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக ஓட்டுனர்கள் புலம்புகின்றனர்.

மேலும் இந்த சாலையில் அமைந்துள்ள மானார் கிராமத்தில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகிறார்கள். இவ்வழியாக சென்று வரும் வாகனங்களால் சாலையில் இருந்து பெருமளவு புழுதி பறப்பதால் சுற்றுபுறச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் வீடுகளில் மண் தூசிகள் பரவி பொதுமக்களுக்கு சுவாசக்கோளறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஓராண்டுக்கு மேலாகியும் மந்த கதியில் பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து சாலை சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Manjur kovai ,road renovation work slowdown ,
× RELATED மஞ்சூர் -கோவை சாலையில் உலா வரும் காட்டு யானைகள்