×

வறட்சியால் விளைச்சல் பாதிப்பு மேரக்காய் விவசாயிகள் கவலை

மஞ்சூர், மார்ச் 13:  மேரக்காய்க்கு ஓரளவு நல்ல விலை கிடைத்து வந்தாலும் வறட்சியால் விளைச்சல் பாதித்திருப்பது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் தேயிலை விவசாயத்துடன் ஏராளமானோர் மேரக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலி இடங்களிலும் மற்றும் தேயிலை தோட்டங்களில் மிகப்பெரிய அளவில் பந்தல்களை அமைத்து மேரக்காய்களை பயிரிட்டுள்ளனர். விளைந்த மேரக்காய்களை அறுவடைக்கு பின் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக சென்றும் மேரக்காய்களை கொள்்முதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக மழை அறவே பெய்யாத நிலையில் கடும் வறட்சி நிலவி வருகிறது. பகல் நேரங்களில் சமவெளி பகுதிகளைபோல் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மேரக்காய்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் கொடிகள் காய்ந்து கருகி, மேரக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் மேரக்காய்களுக்கு ஓரளவு நல்ல விலை கிடைத்து வரும் நிலையில், வறட்சியின் காரணமாக மேரக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Tags : drought ,
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!