×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் குளங்களை தூர்வாரும் பணி நிறைவு

ஊட்டி,மார்ச் 13: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள குளங்களை தூர் வாரும் பணிகள் நிறைவடைந்த நிலையில், கரையை சுற்றிலும் மலர் நாற்று நடவு பணி விரைவில் துவக்கப்படவுள்ளது.சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, அதில் பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். குறிப்பாக, கோடை விடுமுறையின்போது வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவில் பல்வேறு அலங்காரப் பணிகள், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நிலையில், கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், தற்ேபாது பூங்காவில் நாற்று நடவு செய்யப்பட்டு அதனை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல், பூங்காவில் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது, பூங்கா நுழைவு வாயில் பகுதியில் உள்ள குளங்களில் சேறும் சகதியும் நிறைந்தது. இதனால், இதில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த குளங்களில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடந்து வந்த பணிகளின்போது குளம் சேறு,சகதி அகற்றப்பட்டு,ஆழப்படுத்தப்பட்டு அதில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குளத்தின் கரைகளில் பல வண்ண மலர் செடிகளும் நடவு செய்யப்படவுள்ளது. மேலும், இந்த குளங்களில் கண்ணாடி கெண்டை மீன்களும் வளர்க்கப்படவுள்ளது.

Tags : Ooty Botanic Gardens ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் குளம், கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்