×

சாலையோரம் இருந்த மரம் வெட்டி அகற்றம்

ஈரோடு, மார்ச் 13: ஈரோட்டில் சாலையோரம் இருந்த 40 ஆண்டு பழமையான மரக்கிளைகளை வெட்டியது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையில் மெட்ராஸ் ஓட்டல் அருகே 40 ஆண்டு பழமையான பூவரசன் மரம் உள்ளது. இந்த மரத்தை இதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தனது கட்டிடத்திற்கு இடையூறாக இருந்ததால் எந்த அனுமதியும் பெறாமல் ஆட்களை வைத்து வெட்டி உள்ளார். இதைப்பார்த்த கடைக்காரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகையால், மரத்தின் கிளைகளை பாதியிலேயே விட்டு விட்டு சென்றனர். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதுகுறித்து கடைக்காரர்கள் கூறுகையில்,`பூவரசன்மரம் 40 ஆண்டு பழமையானது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் இங்கு நின்று தான் பஸ் ஏறி செல்வார்கள். ஆனால், அதிகாலையில் இங்குள்ள காம்ப்ளக்ஸ் உரிமையாளர் யாருக்கும் தெரியாமல் மின்கம்பியை உரசியபடி கிளைகள் உள்ளதாக கூறி ஆட்களை வைத்து வெட்டி உள்ளார். ஆனால், இந்த மரத்தால் மின்கம்பிகளுக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை. நாங்கள் காலையில் வந்து மரத்தை வெட்டியவர்களை கேட்டபோது எங்களை திட்டியபடி மர கிளைகளை வெட்டினர். நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மரக்கிளைகளை போட்டு விட்டு சென்றனர்’ என்றனர். சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் குழந்தைவேலு தலைமையில் ஆய்வு செய்தனர். மரத்தின் கிளைகளை வெட்டியவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்தனர்.
பின்னர், வெட்டப்பட்ட மரக்கிளைகளை அங்கிருந்து அகற்றினர். நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்கள் இடையூறாக இருந்தால் அதை வெட்டுவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி சட்ட விரோதமாக மர கிளைகளை வெட்டிய நபர்கள் மீது போலீசில் புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...