×

கடந்தாண்டு விடுபட்ட பகுதியில் சுள்ளன் ஆற்றில் மீண்டும் தூர்வாரும் பணி துவக்கம் தண்ணீரை வெளியேற்றி முறையாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை

வலங்கைமான், மார்ச் 13: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வெட்டாறுக்கும், குடமுருட்டி ஆற்றுக்கும் இடையில் ஓடுகின்ற முக்கிய பாசன வடிகாலான சுள்ளன் ஆற்றின் நீளம் சுமார் 18 கிலோ மீட்டர் ஆகும். சுள்ளன் ஆறு பொய்கை ஆறு என்ற பெயரோடு பாபநாசம் தாலுகா அகரமாங்குடி அருகே புரசக்குடி என்ற பகுதியில் 15 மீட்டர் அகலத்தில் சிறு வடிவாய்க்காலாக தோன்றி வலங்கைமான் பகுதியில் சுமார் 45 மீட்டர் அகலத்தில் வெட்டாற்றில் முடிகிறது. சுள்ளன் ஆற்றில் பாபநாசம் ஒன்றியத்தில் புரசக்குடி, நாவலடி, ஓலப்பச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள ரெகுலேட்டர்களும் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட அவிச்சாக்குடி, ஆவூர், குளக்குடி, நரசிங்கமங்கலம் உள்ளிட்ட ரெகுலேட்டர்கள் என 7 ரெகுலேட்டர்கள் பாசனத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அகரமாங்குடி, அவிச்சாகுடி, ஆவூர்-சாளுவம்பேட்டை, கோவிந்தகுடி, வீராணம், மேல நல்லம்பூர், கீழ நல்லம்பூர், குளக்குடி, தொழுவூர், காங்கேய நகரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 2,500 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுகிறது. நல்லூர், இனாம்கிளியூர், கோவிந்தகுடி, சந்திரசேகரபுரம், ஆதிச்சமங்கலம், விருப்பாட்சிபுரம், வலங்கைமான் போன்ற குடமுருட்டி ஆறு பாசன கிராமங்களுக்கு முக்கிய வடிகாலாக சுள்ளன் ஆறு விளங்குகிறது.

இந்த சுள்ளன் ஆற்றுக்கு மேட்டூர் அணையிலிருந்து பிரியும் காவிரியின் கிளை நதிகளோடு நேரடியாக இதுவரை இணைப்பு எதுவும் ஏற்படுத்தபடவில்லை. டெல்டா மாவட்டங்களில் காவேரி கோட்டத்தின்கீழ் உள்ள குடமுருட்டி ஆறு, வெண்ணாறு கோட்டத்தின்கீழ் உள்ள வெட்டாறு ஆகியவற்றில் பாசனத்திற்குற்கு அதிகமாக நீர் திறக்கும்போதும், மழைக்காலங்களில் தேவைக்கு அதிகமான உபரி நீர் விவசாயிகளால் வடிய விடுகின்ற போதும் சுள்ளன் ஆறு நிரம்பும்.இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளாக சுள்ளன் ஆறு தூர்வாரப்படாததால் ஆறு முழுவதும் காட்டாமணக்கு மற்றும் நாணல்களால் ஆக்கிரமித்துள்ளது. ஆதலால் சாகுபடி காலங்களில் தண்ணீர் வருவதற்கும், மழைக்காலங்களில் உபரிநீர் வடிவதற்கும் வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளாக தூர்வாரப்படாத சுள்ளன் ஆற்றினை விவசாயிகள் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு இறுதியில் அவசர கதியில் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது. அப்போது பணி முறையாக நடைபெறாமல் அவசர கதியில் சுள்ளன் ஆற்றினை ஆக்கிரமித்துள்ள நாணல் மற்றும் காட்டாமணக்கு செடிகளை மட்டும் இயந்திரத்தின் உதவியோடு அப்புறப்படுத்தப்பட்டது. அவசர கதியில் முடிப்பதிலேயே கவனம் செலுத்திய அதிகாரிகள் பணிகள் அளவீட்டுமுறை பின்பற்றி நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய முன்வரவில்லை. மேலும் பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறையில் கடைநிலை ஊழியர்களான லஸ்கர் என்ற பணியிடம் காலியாக உள்ளதால் பணிகள் நடைபெறும் இடத்தில் பொதுபணித்துறையை சேர்ந்த கடைநிலை ஊழியர்கள் யாரும் இல்லை. இருப்பினும் பணிகள் முழுமையடையவில்லை. சுள்ளன் ஆற்றில் நரசிங்கமங்கலம் ரெகுலேட்டருக்கு தெற்கே வெட்டாற்றில் முடியும் இடம் வரை உள்ள சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்படவில்லை.

மேலும் குளக்குடி ரெகுலேட்டரில் இருந்து மேற்கே சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்படவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிடாததன் விளைவாக கடந்த ஆண்டு பத்தாண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்ட சுள்ளன் ஆறு முழுமையாக தூர்வாரப்படாததால் சித்தன்வாழூர் கிராமத்தில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் மழையின்போது தண்ணீர் வடியாமல் நீரில் மூழ்கி பாதிப்படைந்தது. அதேபோல் மழைஅதிகமாக பெய்தபோது சுள்ளன் ஆறு தூர்வாரப்படாத அணியமங்கலம் பகுதியில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் தூர்வாரப்பட்ட சுள்ளன் ஆறு முழுமையாக தூர்வாரப்படாததால் மீதமுள்ள பகுதியில் தற்போது ஐந்தடி தண்ணீர் உள்ள நிலையில் நேற்று அவசர கோலத்தில் இயந்திரத்தின் உதவியோடு பெயரளவில் அரையும் குறையுமாக தூர்வாரும் பணியினை துவங்கியதால் சம்பவ இடத்திற்கு வந்த விவசாயிகள் ஆற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு முறையாக தூர்வார வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்ததால் அத்துடன் பணியை நிறுத்திவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. எனவே சுள்ளன் ஆற்றில் தண்ணீரை வெளியேற்றிவிட்டு முறையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sullen River ,
× RELATED சுள்ளன் ஆற்றில் கட்டப்படும்...