×

பட்டாபிராம் பகுதி தேவாலயத்தில் ஊழியர் கொலையில் வாலிபர் கைது: பாவ மன்னிப்பு கேட்டபோது சுற்றிவளைப்பு

ஆவடி: ஆவடி அருகே பட்டாபிராம் பகுதி தேவாலய ஊழியர் கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம், சத்திரம், பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஈனோஸ் (62). இவர் ஆவடியில் உள்ள பாதுகாப்பு துறையில் ஓய்வு பெற்ற ஊழியர். இவர் இதே பகுதி தண்டுரை, ஜேம்ஸ் தெருவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு ஈனோஸ் தேவாலயத்தில் சக ஊழியர்களான சாக்கோ, வில்சன் ஆகியோருடன் வேலையை கவனித்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதி அம்பேத்கர் நகர், பாரதிதாசன் தெருவை சேர்ந்த மோசஸ் (27) என்பவர் அங்கு வந்துள்ளார்.

பின்னர், ஈனோஸ், மோசஸ் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மோசஸ் தேவாலயத்தில் இருந்த கத்தியை எடுத்து ஈனோசை மார்பில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த ஈனோஸ் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து பட்டாபிராம் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தமிழ் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை இரும்புலியூர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பதுங்கி இருந்த மோசசை தனிப்படை போலீசார் பிடித்து நள்ளிரவு காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கொலையாளி மோசசுக்கு கடந்த 2013ம் ஆண்டு ஆவடி அடுத்த சேக்காடு கிராமத்தை சேர்ந்த சத்தியா என்பவரை சத்தியவேடு பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்த வழக்கு இருந்தது. இவ்வழக்கு விசாரணை கடந்த மாதம் முடிந்து மோசஸ் விடுதலை செய்யப்பட்டார். பின்னர், மோசஸ் அடிக்கடி கிறிஸ்தவ தேவாலயத்தில் சில பணிகளை செய்து வந்துள்ளார்.

மேலும் கஞ்சா போதைக்கும் அடிமையான மோசஸ் கஞ்சா போதையில் தேவாலத்திற்கு வருவாராம். மேலும், மோசஸ் எதற்கு எடுத்தாலும் கோபப்பட கூடிய குணம் உடையவர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஈனோஸ் தேவாலயத்தில் உள்ள வேலையை பார்க்கும்படி மோசஸிடம் கூறியுள்ளார். இதனால்  அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோசஸ் அங்கிருந்த கத்தியை எடுத்து ஈனோஸ் மார்பில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை பார்த்த சக ஊழியர்கள் சாக்கோ, வில்சன்  ஆகியோர் பயந்து ஓடி விட்டனர்.

பிறகு தப்பி ஓடிய மோசஸ் வீட்டுக்கு வந்து தனது நண்பரின் பைக்கை வாங்கிக்கொண்டு இரும்புலியூரில் உள்ள தேவாலத்திற்கு சென்றுள்ளார். அங்கு பிரார்த்தனையில் இருந்த பாதிரியாரிடம் கொலை செய்ததை கூறி அழுதுள்ளார். உடனே பாதிரியார் சக ஊழியர்கள் உதவியுடன் அவரை மடக்கி பிடித்து போலீசுக்கு தெரிவித்துள்ளார். போலீசார் விரைந்து சென்று மோசஸை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Pattabram ,
× RELATED பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வாலிபர் கைது