சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு; கொரோனா இருப்பதாக பயணி நாடகம்: அந்தமான் விமானம் தாமதமாக சென்றது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் உள்ளதாக பயணி கூறியதை அடுத்து, அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் விமானம் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று காலை 9.50 மணிக்கு அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை நடந்து கொண்டிருந்தது. அப்போது வரிசையில் நின்றுகொண்டிருந்த அந்தமானை சேர்ந்த அபிஷேக் சைனா (27) என்பவர் அந்தமான் செல்ல வந்திருந்தார். அவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சென்று, ‘‘நான் இத்தாலியில் இருந்து வந்தவன். எனக்கு கொரேனா வைரஸ் இருக்கலாம். எனவே நான் அந்தமான் செல்ல விரும்பவில்லை. என்னை இங்குள்ள மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள்’’ என கூறினார்.

இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் கொடுத்தனர். விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்தமானை சேர்ந்த அபிஷேக்  சைனா தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். இவர் பணி நிமித்தமாக  இத்தாலி நாட்டிற்கு சென்று விட்டு கடந்த 4ம் தேதி இத்தாலியில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு வந்தார். டெல்லி விமான நிலையத்தில் எல்லா பயணிகளை போல் இவருக்கும் மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது. அதில் இவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்து அனுப்பி விட்டனர். இவர் அன்றே டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்துள்ளார். சென்னை பெருங்குடியில் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார்.

நேற்று காலை அவர் அந்தமான் செல்ல வந்தபோது இந்த நாடகத்தை நடத்துகிறார் என தெரியவந்தது. டெல்லியில் நடந்த மருத்துவ பரிசோதனையில் நார்மல் என்று தெரியப்படுத்தப்பட்டு விட்டது. எனவே  நீங்கள் அந்தமான் செல்லலாம் என அதிகாரிகள் கூறினர். ஆனால் தனக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என அபிஷேக்  அடம் பிடித்தார். இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்த மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்தனர். இவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இவர் நன்றாகத்தான் இருக்கிறார் என உறுதியாக தெரிவித்ததோடு, தாராளமாக விமான நிலைய பயணம் மேற்கொள்ளலாம் என கூறினர். இதற்கிடையே இந்த பிரச்னையால் சுமார் 30 நிமிடம் காத்திருந்த ஏர் இந்தியா விமானம் அதன் பின்பு இவருடைய பயணத்தை ரத்து செய்து விட்டு மீதி பயணிகளுடன் அந்தமான் புறப்பட்டுச் சென்றது.  

பின்பு அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து, எங்களை பொறுத்தவரை உங்களுக்கு எந்த நோயும் இல்லை. வேண்டுமானால் நீங்களாகவே சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு மருத்துவர்களிடம் கூறி சிறப்பு வார்டில் சேர்ந்து விடுங்கள் என அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை 30 நிமிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

16 விமானங்கள் ரத்து

கொரோனா வைரஸ் பீதி காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்றும் 16 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து ஜெர்மன், குவைத், தாய்லாந்து, ஹாங்காங், தோகா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு செல்லும் விமானங்களும், அதேபோல 8 நாடுகளில் இருந்து சென்னை வரும் 16 விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. கொரோனா பீதி காரணமாக போதிய பயணிகள் இல்லாததால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

Related Stories:

>