×

வந்தவாசி நகராட்சியில் 35 லட்சம் வாடகை செலுத்தாத 17 கடைகளுக்கு `சீல்'ஆணையாளர் நடவடிக்கை

வந்தவாசி, மார்ச் 13: வந்தவாசியில் ₹35 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ள நகராட்சிக்கு சொந்தமான 17 கடைகளுக்கு அதிகாரிகள் நேற்று `சீல்' வைத்தனர்.
வந்தவாசி நகராட்சிக்கு சொந்தமாக பழைய, புதிய பஸ் நிலையங்களில் 75க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இதில் 17 கடைக்கான குத்தகைதாரர்கள் வாடகை செலுத்தவில்லையாம். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இருப்பினும், குத்தகைதாரர்கள் வாடகை பாக்கியை செலுத்தவில்லையாம்.இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில், பொறியாளர் உஷாராணி, மேலாளர் ராமலிங்கம், கட்டிட ஆய்வாளர் நடராஜன், சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் பொறியாளர் பிரிவு அலுவலர் சிவக்குமார் ஆகியோர், போலீசார் பாதுகாப்புடன் சென்று, பழைய பஸ் நிலையம் பஜார் வீதி, காந்தி சாலையில் 16 கடைகள், புதிய பஸ் நிலையத்தில் ஒரு கடை உட்பட 17 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்

இந்த 17 கடைகளின் குத்தகைதாரர்கள் ₹35 லட்சம் நிலுவை வைத்து இருந்தனர். நேற்று சீல் நடவடிக்கையை தொடர்ந்து, ஒரு சில கடைக்காரர்கள் ₹6 லட்சம் வரை செலுத்தினார்களாம். அவர்களது கடைகளை மட்டும் அதிகாரிகள் உடனடியாக திறந்துவிட்டனர். மேலும், சீல் வைக்க சென்றபோது ஆணையாளரிடம், கடை குத்தகைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். ஆணையாளரை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துக்குமார், அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார். எனவே, முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். நகராட்சி கடைகளுக்கு சீல் வைத்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Seal ,shops ,Vandavasi Municipality ,
× RELATED 24,000 வேட்டி சேலைகள் பதுக்கல் அதிமுக...