×

விவசாயியை மிரட்டிய வழக்கில் விசாரணைக்கு சென்ற எஸ்.ஐ.யை கடித்து குதறிய தொழிலாளி கைது நாகர்கோவில் அருகே சம்பவம்

நாகர்கோவில், மார்ச் 13 :
நாகர்கோவில் அருகே விசாரணைக்கு சென்ற சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் கிழித்து, மார்பில் கடித்து காயப்படுத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் அருகே உள்ள கீழ வண்ணான்விளை பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (63). விவசாயி. இவருக்கு சொந்தமாக தென்னந்தோப்புகள், விவசாய நிலங்கள் உள்ளன. இவரது சொத்தின் அருகே நாகமணி (48) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் செல்வனின் தென்னந்தோப்பில் இருந்து தொடர்ச்சியாக இளநீர் திருடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக தமிழ் செல்வன் பூமி பாதுகாப்பு சங்கத்தில் புகார் அளித்தார். இதனால் தமிழ் செல்வன் மீது ஆத்திரம் அடைந்த நாகமணி, கடந்த 10ம் தேதி தென்னந்தோப்பில் உள்ள வேலி கற்களை உடைத்து சேதப்படுத்தினார். மொத்தம் 25 கற்கள் உடைக்கப்பட்டு இருந்தன. இது குறித்து தமிழ் செல்வன் தட்டிக்கேட்ட போது அவரை நாகமணி ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து தமிழ் செல்வன், சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நாகமணி மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 294 (பி), 427, 506 (ii) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இது தொடர்பாக விசாரணை நடத்த சப் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். சம்பவ இடத்தில் சேத விபரங்களை பார்த்துக் ெகாண்டு இருந்த போது வீட்டில் நாகமணி இருப்பது தெரிய வந்தது. அப்போது எஸ்.ஐ. சார்லஸ், நாகமணி வீட்டுக்கு சென்று அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்தார்.

அப்போது எஸ்.ஐ. சார்லசை அவதூறாக பேசிய நாகமணி, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து என்னை விசாரிக்க நீ யார்? என கேட்டு குத்தினார். இதில் எஸ்.ஐ. சார்லசின், இடது கன்னத்தில் கத்தி கிழித்தது. அப்போது நாகமணியை பிடிக்க முயன்ற போது எஸ்.ஐ. சார்லசை கீழே தள்ளி மார்பில் கடித்தார். இதை பார்த்ததும் எஸ்.எஸ்.ஐ. கிருஷ்ணகுமார் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து  எஸ்.ஐ. சார்லசை காப்பாற்றினர். இந்த சம்பவம் குறித்து எஸ்.ஐ.சார்லஸ், சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 294 (பி), 323, 324, 353, 506 (ii) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, நாகமணியை கைது செய்தனர்.

Tags : SI ,Nagercoil ,
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’